ஒடுகத்தூரில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு: ஏராளமானோர் திரண்டு தரிசனம்

ஒடுகத்தூர்: ஒடுகத்தூரில் வீடு கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனால், ஏராளமான பொது மக்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பஸ் ரோடு 4வது வார்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(60), ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கலைவாணி(49). இவர்களுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1956ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் புதிய வீடு கட்டுவதற்காக நேற்று முன்தினம் வீட்டை இடித்து அகற்றினர்.

தொடர்ந்து, நேற்று புதிய வீடு கட்டுவதற்காக அடித்தளம் அமைப்பதற்காக ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் 6 அடி ஆழத்தில்  ஜேசிபியின் முன் பக்கவாட்டில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. இதனால், ஜேசிபி டிரைவர் வீட்டின் உரிமையாளரிடம் பள்ளத்தில் ஏதோ உள்ளது என்று  கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த  விஸ்வநாதன் தோண்டப்பட்ட  பள்ளத்தில் இறங்கி பார்த்தபோது உடைந்த நிலையில் சுமார் இரண்டரை அடி  உயரமுள்ள பழங்கால நடராஜர் சிலை இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

அந்த சிலை சுமார் 40 கிலோ எடை இருந்ததால் ஜேசிபி உதவியுடன் மேலே கொண்டுவரப்பட்டது. பின்னர், நடராஜர்  சிலையை கொண்டு சென்று அருகில் உள்ள சிவன் கோயிலில் வைத்தனர். இந்த விஷயம் காட்டுத் தீ  போல் பரவியதும் ஒடுகத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிவன் கோயிலில் திரண்டு நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து  பூஜை செய்து வழிபட்டனர். இதுகுறித்து  அப்பகுதி  மக்கள்  கூறியதாவது: ஒடுகத்தூர் பஸ் ரோடு  பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் அதாவது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும்.

இந்த கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்திற்கு நடராஜர் சிலை இல்லாததால் சிவன், பார்வதி சிலைகளை கொண்டு சுவாமி ஊர்வலம் இத்தனை  ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். ஆனால், தற்போது சிவன் கோயில் அருகிலேயே இந்த வெண்கலம் கலந்த ஐம்பொன் நடராஜர் சிலை  கண்டெடுக்கப்பட்டதால் இதுவும் 11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. மேலும், இந்த  சிலை சிவன் கோயிலுக்கு சொந்தமாகவும்  இருக்கலாம். எனவே சிவன் கோயிலுக்கே சிலையை ஒப்படைக்க வேண்டும். தற்போது,  இந்த  சிலையின் குறிப்பிட்ட பாகம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், பக்கவாட்டு பிரபை ஆகிய பாகங்கள் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் போது சேதமடைந்துள்ளது.

அதிலும் ஒரு பாகம் மட்டுமே கிடைத்தது. பின்னர் பள்ளம் தோண்டிய இடத்தில் மறுபடியும் ஜேசிபி மூலம் ஆராயப்பட்டது. அதில் ஆங்காங்கே சிதறி மீதியுள்ள 3 பாகங்களும் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில், இதுகுறித்து  தகவலறிந்த விஏஓ சரளா, உதவியாளர் வெங்கடேசன் மற்றும்  வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  நடராஜர்  சிலையை கைப்பற்றி அதனை வேப்பங்குப்பம் எஸ்ஐ  இன்பரசன் மற்றும் போலீசார்  உதவியுடன்  பாதுகாப்பாக அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த நடராஜன் சிலை பல கோடி மதிப்புள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: