வக்ப் வாரிய சொத்துகளை பாதுகாத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வக்ப் வாரிய சொத்துகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சொத்துக்களை தடையின்றி பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 30ம் தேதி தலைமை செயலகத்தில், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் செயல்பாடுகள், வக்ப் வாரிய சொத்துகளை பாதுகாத்தல், தனியார் சொத்துகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில்,

* வக்பு வாரியத்தின் தரவுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். வருவாய் பதிவேடுகளுடன் தரவுகள் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும்.

* வருவாய்த்துறை பதிவேடுகள் மற்றும் வக்பு வாரிய பதிவேடுகளில் சிறிய வேறுபாடுகள் இருப்பின், மாவட்ட ஆட்சியர் அளவில் தீர்வு செய்யப்பட வேண்டும்.

* மேற்படி வேறுபாடுகள் களைந்த பிறகு, பதிவேடுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

* மாவட்ட அளவில் வருவாய், வக்பு பதிவேடுகளில் பெரிய அளவில் சிக்கல்கள், வேறுபாடுகள் இருப்பின் அத்தகைய வழக்குகளை நில நிர்வாக ஆணையர்,  நில அளவை துறைக்கு அரசிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

* வக்பு வாரியம் மற்றும் வருவாய் துறையின் சட்ட நிலைப்பாட்டில் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அல்லது சட்டத்துறையின் விளக்கம் தேவைப்பட்டால் அத்தகைய வழக்குகளை பொருத்தமான முடிவுகள் எடுப்பதற்காக மாநில அரசிற்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களின் நலனில், வக்ப் வாரிய செயல்பாடுகளில் அக்கறை கொண்டுள்ளது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகளுக்கு குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு வருவாய் துறையுடன் இணைந்து செயலாற்றி தீர்வு காண வேண்டும். வக்ப் வாரியத்தில், தரவுகளை பெற்று அதன் அடிப்படையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். வக்ப் சொத்துகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சொத்துக்களை தடையின்றி பத்திரப்பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வக்ப் சொத்துக்களின் ஆவணங்களின் தரவுகளை கணினிமயமாக்கி மேம்படுத்த வேண்டும்.

வக்ப் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பி வக்ப் வாரிய வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, வக்ப் வாரிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும். வக்ப் வாரியத்தின் களப்பணியாளர்கள் இந்த சமுதாய மக்களுக்கு சேவை செய்யும் வண்ணம் விழிப்புடன் இருந்து முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசு அனைவருக்குமான அரசு. முன்னெடுப்புகள் மற்றும் முன் மொழிவுகளை அரசுக்கு அனுப்பினால், அவற்றை அரசு கனிவுடன் பரிசீலிக்கும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமை செயலாளர் இறையன்பு, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ் குமார், தமிழ்நாடு வக்ப் வாரிய அரசு சார் உறுப்பினர் ஆசியா மரியம், முதன்மை செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களின் நலனில், வக்ப் வாரிய செயல்பாடுகளில் அக்கறை கொண்டுள்ளது.

Related Stories: