யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு விரைவில் கால்நடை மருத்துவர் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில், யானைகளுக்கு சிகிச்சை அளிக்க விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர், எம்.ஆர்.பாளையம் மையத்தை முறையாக பராமரிக்க வழிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை நேரில் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.  

அப்போது மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். தமிழ்நாடு அரசுத்தரப்பில், வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும். விரைவில் எம்.ஆர்.பாளயைம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவார் என்று வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வனத்துறை அதிகாரி சுஜாதா அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிய வசதிகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விரைவில் கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: