ரூ.7 லட்சம் வரை வரி கிடையாது புதிய வருமான வரி விதிப்பால் யாருக்கு நன்மை? பழைய வரி முறையுடன் ஒரு ஒப்பீடு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் கடைசி முழு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அதிரடி சலுகைகள் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது. இதற்கேற்ப நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான, வருமான வரி உச்சவரம்பு சலுகை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சமாக இருந்த உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுபோல் வரி தள்ளுபடி சலுகையுடன் கணக்கிடும்போது, ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டும் தனி நபர்கள், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில், புதிய வரிமுறையை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்படி, ரூ.5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. இதுதான் தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி வரம்புகளின்படி, ஆண்டு வருவாய் ரூ.3 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம். ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை 5 சதவீதம், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

பழைய வரி விதிப்பு முறையில் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். இதுவும் தொடர்ந்து அமலில் இருக்கும். வரி செலுத்துவோர், விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், வரி கணக்கு சமர்ப்பிக்கும்போது, புதிய வரி விதிப்பு முறையே தானாக தேர்வு செய்யப்பட்டிருக்கும். வரி செலுத்துவோர் விரும்பினால் பழைய முறையை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய வரி விதிப்பு முறையில், நிலையான வரிக்கழிவாக மாதச்சம்பளம் பெறுவோருக்கு  ரூ.50,000, குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் ரூ.15,000 கழிக்கப்படும்.

ஆண்டு வருவாய் ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடிக்குள் உள்ளவர்களுக்கு, மேல் வரி (சர்சார்ஜ்) 10 சதவீதமாக உள்ளது. இந்த மேல் வரி ரூ.1 கோடிக்கு மேல் ரூ.2 கோடிக்குள் 15 சதவீதமாகவும், ரூ.2 கோடிக்கு மேல் ரூ.5 கோடிக்குள் 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் 37 சதவீதமாகவும் உள்ளது. முன்பு அதிகபட்ச மேல் வரியான 42.7 சதவீதம் புதிய வரி விதிப்பில் 39 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டு வருவாயாக ரூ.15 லட்சம் ஈட்டுவோர், வரியாக ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டி வரும்.

இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் ஒருவர் கூறுகையில், புதிய வரி விதிப்பு முறையில், நிரந்தரமாக வழங்கப்படும் வரிக்கழிவுடன் ரூ.2 லட்சம் வரை வரி தள்ளுபடி, சலுகைகளுக்கான வாய்ப்புகள் உள்ளதால், ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டுவோர் கூட வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதுபோல் ஆண்டு வருவாயாக ரூ.15 லட்சத்துக்கு மேல் ஈட்டுவோருக்கு, சில நேரங்களில் பழைய வரி விதிப்பு முறையே சிறந்த ஒன்றாக இருக்கும். எனினும், அவர்கள் வரிச் சேமிப்புத் திட்டங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு போன்றவற்றை பொறுத்து நபருக்கு நபர் இது வேறுபடலாம். பட்ஜெட் அறிவிப்பின்படி இது உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையை அதிகம் பேர் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

மற்றொரு வரி ஆலோசகர் ஒருவர் கூறுகையில், ‘‘மாதச்சம்பளம் சாராத வருவாய் பிரிவினர், ஆண்டு வருவாயாக ரூ.10 லட்சம் ஈட்டினால், 80சி, ரூ.1.5 லட்சத்துக்கு மேலான மருத்துவ காப்பீடு மற்றும் வங்கி சேமிப்பு வட்டி லுகைகளுடன் சேர்த்து ரூ.2 லட்சம் வரி கழிவு பெற்று, கல்விக்கான செஸ் வரி நீங்கலாக பழைய வரிப்பிரிவில் ரூ.72,000 வரி செலுத்த வேண்டிவரும். ஆனால், புதிய வரி முறையில் இவர்கள் கல்விக்கான செஸ் வரி நீங்கலாக ரூ.60,000 செலுத்தினால் போதும். வீட்டுக்கடன் இல்லாத இளைஞர்களுக்கு புதிய வரி முறை பலன் தரும். அதேநேரத்தில், வீட்டுக்கடன் செலுத்துபவர்களுக்கு பழைய வரி விதிப்பில் பலன் அதிகம் கிடைக்கும். நபருக்கு நபர் இது வேறுபடும்’’ என்றார்.

மேலும், புதிய வரி விதிப்பு முறையில், சம்பளதாரர்கள், ஓய்வூதியர்களுக்கான நிரந்தர கழிவு போக, 80சிசிஎச் பிரிவில் அக்னிவீர் நிதி வழங்குவோருக்கான வரிச்சலுகையும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி, புதிய வரி விதிப்பு முறையில் பயணப்படி விடுப்பு (எல்டிஏ), வீட்டு வாடகைப்படி (எச்ஆர்ஏ), தொழில் வரி, வீட்டுக்கடன் வட்டி மற்றும் வருமான வரிச் சட்டம் 80சிசிடி (தேசிய பென்ஷன் திட்டத்தில் நிறுவனங்கள் செலுத்தும் தொகை) தவிர 80சி, 80டி, 80இ போன்ற பிரிவுகளின் கீழ் வரிச்சலுகை கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  இதுதவிர, வருமான வரி ரிட்டன் படிவங்களை பரிசீலிக்கும் கால அளவு 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. வரி தொடர்பான குறைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் விரைந்து தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படும்.  என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

* புதிய, பழைய வரி விதிப்பு முறையும்

செலுத்த வேண்டிய வரியும் ஓர் ஒப்பீடு

(மேல் வரிகள் மற்றும் செஸ் வரியுடன் சேர்த்து)

தனிநபர்

ஆண்டு வருவாய்    பழைய வரி விதிப்பு முறை (செலுத்த வேண்டிய வரி)    தற்போது உள்ள புதிய வரி விதிப்பு முறை (செலுத்த வேண்டிய வரி)    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்பு முறை (செலுத்த வேண்டிய வரி)

ரூ.5,00,000     -     -    -

ரூ.5,50,000     -    ரூ.18,200    -

ரூ.6,00,000    -    ரூ.23,400    -

ரூ.7,00,000    -    ரூ.33,800    -

ரூ.7,50,000    ரூ.23,400    ரூ.39,000     -

ரூ.10,00,000    ரூ.75,400    ரூ.78,000    ரூ.54,600

ரூ.15,00,000    ரூ.2,10,660    ரூ.1,95,000     ரூ.1,45,600

ரூ.30,00,000    ரூ.6,78,600    ரூ.6,63,000     ரூ.6,08,400

ரூ.70,00,000    ரூ.21,19,260    ரூ.21,02,100    ரூ.20,42,040

ரூ.1,50,00,000    ரூ.50,85,990    ரூ.50,68,050     ரூ.50,05,260

(நிரந்தர வரிக்கழிவுடன் சேர்த்து உத்தேச கணக்கீடு)

புதிய வருமான வரி    

ஆண்டு வருவாய்    வரி

ரூ.3 லட்சம் வரை    -

ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம்  வரை    5%

ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை    10%

ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை    15%

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை    20%

ரூ.15 லட்சத்துக்கு மேல்    30%

பழைய வரி விதிப்பு முறை

ஆண்டு வருவாய்    வரி

ரூ.2.5 லட்சம் வரை    -

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை    5%

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்    20%

ரூ.10 லட்சத்துக்கு மேல்    30%

Related Stories: