2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: 50 புதிய விமான நிலையங்கள்; ‘எல்லாமே அதானிக்கா’

நாட்டில் பிராந்திய விமான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 50 விமான நிலையங்கள், அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது காங்கிரஸ் எம்.பிக்கள் எல்லாமே அதானிக்கா என்று குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் தளங்கள், நீர் ஏரோடிரோம்கள் அமைக்கப்படும். இதுமட்டுமல்லாமல் துறைமுகங்கள், எஃகு, உரம் மற்றும் உணவு தானியங்கள் துறைகளுக்கான கடைசி மற்றும் முதல் மைல் கல் இணைப்புக்கான 100 முக்கிய போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* 102 கோடி கொரோனா தடுப்பூசி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “பிரதமர் மோடியால் கடந்த 2014ம் ஆண்டு தேசிய திட்டமாக தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தின்கீழ் இதுவரை 47.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய கிராமப்புற, ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ், சுயஉதவிக் குழுக்களில் 1 லட்சம் பெண்களை சேர்த்துள்ளதன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 9.6 கோடி பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது.  102 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்றார்.

* மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட

வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து இரட்டிப்பாகி ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், மூத்த குடிமக்கள் மாத வருவாய் கணக்கு திட்டத்துக்கான உச்ச வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு வங்கி கணக்குக்கான சேமிப்பு தொகை ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

விளையாட்டு துறைக்கு கூடுதலாக ரூ.700 கோடி

ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் 2024ம் ஆண்டு பாரீசில் நடைபெறும்  ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் வகையில், அடுத்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் விளையாட்டு துறைக்கு கூடுதலாக ரூ.723  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ரூ.3,397 கோடியாக இருந்தது.

* தேசிய அளவில் விளையாட்டை மேம்படுத்தும் கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு கூடுதலாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.325 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய ஊக்க மருந்து தடுப்பு குழுவுக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 5ஜி ஆப்களை உருவாக்க 100 ஆய்வகம் அமைப்பு

பட்ஜெட்டில், 5ஜி சேவையை பயன்படுத்தி ஆப்களை உருவாக்க பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: