2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: 2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு

நிதிநிலை அறிக்கையில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பசுமை தொழில்துறை, பொருளாதார மாற்றங்களில் 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை அடையும் நோக்கத்துடன் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறைந்த கார்பன் வௌியேற்றத்தை எட்டவும், புதைப்படிம எரிபொருள் இறக்குமதியை வெகுவாக குறைக்கவும் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் செயல்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் மெட்ரின் டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆற்றல் மாற்றம், பூஜ்ய உமிழ்வு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை மூலதன முதலீடாக 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயோ மின் திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

* ஸ்டார்ட்அப்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு பல்வேறு வருமானவரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் வரும் மார்ச் மாதம் வரை இணையும் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கால அளவு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வரும் மார்ச் 2024ம் ஆண்டு வரை இணையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வருமான வரிச்சலுகைகளை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

* தேசிய டிஜிட்டல் நூலகம்

கொரோனா தொற்று பாதிப்பால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை நிவர்த்தி செய்ய, தரமான புத்தகங்கள் கிடைக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர்  அறிவித்தார்.

* 5ஜி ஆப்களை உருவாக்க 100 ஆய்வகம் அமைப்பு

பட்ஜெட்டில், 5ஜி சேவையை பயன்படுத்தி ஆப்களை உருவாக்க பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

* உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.10 லட்சம் கோடி

2023-2024ம் நிதியாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதன செலவினத்துக்கான நிதி 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3சதவீதமாக இருக்கும். புதிதாக நிறுவப்பட்டுள்ள  உள்கட்டமைப்பு நிதி செயலகம் அதிக தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவும். அமிர்தகாலத்துக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பு வகைப்பாடு மற்றும் நிதியுதவி கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி குறைப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கடந்தாண்டு ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 13 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*கடந்த 2022ம் ஆண்டில் ரூ.98,467.85 கோடியும், 2021ம் ஆண்டில் ரூ.1,11,169 கோடியும் இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் நிதி ரூ.2000 கோடி குறைப்பு

ஒன்றிய பட்ஜெட்டில் சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 38 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.3097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ. 5020.50 நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1922.90 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில்  1,689 கோடி ரூபாய் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்திற்காக 64.4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான  திட்டத்திற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.610 கோடி ஆகும்.

* மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.19,519 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் நடந்து வரும் மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.19,519 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த நிதி ரூ.15,628 கோடியாக இருந்தது. இந்த ஆண்டுக்கான செலவீனத்தில் பங்கு முதலீடு ரூ.4,471 கோடி, துணைக் கடன் ரூ.1,324 கோடி மற்றும் உதவி மூலம் ரூ.13,723 கோடி ஆகியவை அடங்கும்.

* ஆன்லைன் கேம் வெற்றி 30 % டிடிஎஸ் பிடித்தம்

சமூக வலைதளங்களில் ஆன்லைன் மூலம் விளையாட்டில் வெற்றி பெற்று ஈட்டப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 30% டிடிஎஸ் பிடித்தம் செய்யவும், தற்போது நடைமுறையில் உள்ள ரூ.10,000 டிடிஎஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: