2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: உணவு, உரம், பெட்ரோலியம் மானியம் ரூ.5.21 லட்சம் கோடி

2022-23 ம் ஆண்டிற்கான உணவு, உரங்கள் மற்றும் பெட்ரோலியத்திற்கான மொத்த மானியம் ரூ. 5,21,584 கோடி என ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.4,46,149 கோடியாக இருந்தது. இதில் உணவு மானியம் 2021-22ல் ரூ.2,88,968 கோடியிலிருந்து நடப்பு நிதியாண்டில் ரூ.2,87,194.05 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உர மானியம் கடந்த நிதியாண்டில் ரூ.1,53,758 கோடியில் இருந்து இந்த நிதியாண்டில் ரூ.2,25,220 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. யூரியா மற்றும் யூரியா அல்லாத டிஏபி ஆகிய இரண்டிற்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.  

யூரியா மீதான மானியம் ரூ.1,00,988 கோடியிலிருந்து ரூ.1,54,097 கோடியாகவும், பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியம் ரூ.52,769 கோடியிலிருந்து ரூ.71,122 கோடியாகவும் உயரும். பெட்ரோலிய மானியமும், இந்த காலகட்டத்தில் ரூ.3,422 கோடியிலிருந்து ரூ.9,170 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், விவசாயிகள் தொடர்ந்து உரங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, யூரியா மற்றும் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு மானியத்தை அதிகரிக்க  முடிவு செய்துள்ளது.

அடுத்த நிதியாண்டில், உணவு, உரம் மற்றும் பெட்ரோலியத்திற்கான மொத்த மானியங்கள் 2022-23ல் ரூ.5,21,584 கோடியிலிருந்து 28 சதவீதம் குறைந்து ரூ.3,74,707 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்  உர மானியம் இந்த நிதியாண்டில் ரூ.2,25,220.16 கோடியிலிருந்து 2023-24ல் ரூ.1,75,099 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோலிய மானியங்கள் நடப்பு நிதியாண்டில் ரூ.9,170 கோடியிலிருந்து ரூ.2,257 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களின் போது தொடங்கப்பட்ட இலவச உணவு தானிய பொருட்கள் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தியதால், உணவு மானியம் 2022-23ல் ரூ.2,87,194 கோடியிலிருந்து அடுத்த நிதியாண்டில் ரூ.1,97,350 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் உற்பத்தியாளர்களுக்கு உர மானியத்தை அரசு வழங்குகிறது. சந்தையில் விற்கப்படும் யூரியாவின் எம்ஆர்பி விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. விற்பனை விலைக்கும் உற்பத்திச் செலவுக்கும் உள்ள வித்தியாசம் மானியமாக வழங்கப்படுகிறது. டிஏபி மற்றும் எம்ஓபி போன்ற யூரியா அல்லாத உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியமும் வழங்கப்படுகிறது. பெட்ரோலியத்தில் மானியம் என்பது சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படுகிறது.

* பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டம்

சுதந்திர தின அமிர்த பெருவிழாவையொட்டி, பெண்களை கவுரவிக்கும் சிறுசேமிப்பு பத்திரம் வெளியிடப்பட உள்ளது. இதன் கீழ் பெண்கள் அல்லது பெண்குழந்தைகளின் பெயரில் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இந்த சேமிப்பு பத்திரங்களில் இருந்து ஒரு குறிப்பிட்டத் தொகையை அவசர செலவுகளுக்காக எடுக்கலாம்.

* செயற்கை வைரம் வரி குறைப்பு

இயற்கையான வைரங்கள் கிடைப்பது குறைந்து வருவதால் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் செயற்கை வைரம் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சேலை உடுத்தி வந்த நிதியமைச்சர்

* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் மற்றும் உறவினர்கள் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அமைச்சரின் பட்ஜெட் உரையை பார்த்தனர்.

* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்.

* தனது அலுவலகத்துக்கு வெளியே பாரம்பரியமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் சூட்கேசுடன் அமைச்சர் தனது குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் தங்க நிறத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற உறையில் டேப்லட்டை அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்தார்.

* பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிதியமைச்சர் கர்நாடக மாநிலத்தில் நெய்யப்பட்ட கசுதி வேலைப்பாடு செய்யப்பட்ட கைத்தறி புடவையை அணிந்து இருந்தார்.

* 800கிராம் எடை கொண்ட இந்த சேலையில் ரதங்கள், மயில் மற்றும் தாமரை இடம்பெற்று இருந்தது.

* கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் பத்ரா மேலணை திட்டத்துக்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “கர்நாடகாவின் வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டை களைய பத்ரா மேலணை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பத்ரா மேலணை திட்டத்திற்காக 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது” என்று கூறினார். பாஜ ஆட்சி செய்யும் மிகப்பெரிய மாநிலமான கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்திற்கு ரூ.5,300 கோடி நிதி உதவி அறிவிக்ப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

Related Stories: