தொடக்க பள்ளி தொடங்க, நடுநிலை பள்ளி தரம் உயர்த்த அரசுக்கு 6ம் தேதிக்குள் கருத்துரு அனுப்ப வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைப்படப் பயிற்சி மேற்கொண்டு தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகளின்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து சார்ந்த கருத்துருக்களை ஜிஐஎஸ் வரைபடத்துடன் கடந்த 6ம் தேதிக்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்ததால் கோரப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத் திட்டம் 2023-24ல் சமர்பிக்க ஏதுவாக புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட் வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்களை பூர்த்தி செய்து விவரங்களுடன் முழுவடிவில் அனுப்பப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைபடத்துடன் அளிக்கப்பட வேண்டும். மேலும் புவியியல் தகவல் முறைமையை பயன்படுத்தி தேவையின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வளமையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய தொடக்கப் பள்ளி தொடங்குவதற்கான இடம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் அசல் சான்று இணைக்கப்பட வேண்டும். புல வரைப்படத்தில் பள்ளிக்கான இடம் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு கட்டட வசதி கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளி துவங்கும் பட்சத்தில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருத்தல் வேண்டும். கருத்துருக்களை முழு வடிவில் உரிய படிவங்களுடன் மூன்று நகல்களில் இவ்வியகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். எனவே விவரங்களை பூர்த்தி செய்து வரும் 6ம் தேதிக்குள் deesection@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பின் நன்கு ஆய்வு செய்து அனுப்ப வேண்டும்.

Related Stories: