ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஹவில்தார் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு

சென்னை: சென்னை கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கை: சுமார் 10,880 வேலைகளை செய்யக்கூடிய பணியாளர்கள் பணிக்காலியிடங்களும் சுமார் 529 ஹவில்தார் பணிக்காலியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. பணிக்காலியிடத்திற்கு 18 முதல் 25 வயது வரையிலும், சில பதவிகளுக்கு 18 முதல் 27 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டிக்கு வயது வரம்பில் 5 வருட சலுகையும், ஒபிசிக்கு 3 வருட சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் சலுகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்(மகளிர், எஸ்சி,எஸ்டி மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை). இப்பணியிடத்திற்கு கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்படும். ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உட்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெறும். மொழிப்பிரச்னை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்மொழியில் தேர்வு நடத்தப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இத்தேர்வில் பங்கேற்று எளிதில் வெற்றி பெற இயலும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 17 ஆகும். கடைசி தேதி வரை காத்திராமல் உடனடியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தேர்வு சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கீழ் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களான கிண்டி, கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், கண்ணகி நகர் கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், மாநிலக் கல்லூரி கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியிலும் தன்னார்வ பயிலும் வட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு, 9499966026, ,9499966023 8870976654, 7811863916, என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Stories: