எடப்பாடிக்கு போட்டியாக ஓபிஎஸ் சார்பில் செந்தில்முருகன் வேட்பாளராக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை எடப்பாடி அறிவித்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக எடப்பாடி அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் மற்றொரு அணி தலைவரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் பாஜ சார்பில் வேட்பாளரை நிறுத்தினால், நாங்கள் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு, பாஜ வேட்பாளருக்கு ஆதரவு தருவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இருக்கிறோம்.

எங்களுடைய வேட்பாளர் பலமான வேட்பாளர். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு தடையாக எந்த காலத்திலும் இருக்க மாட்டேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் வந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஏ மற்றும் பி விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால், உறுதியாக கையெழுத்து போடுவேன். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனி சின்னத்தில் (சுயேச்சை) போட்டியிடுவோம். சசிகலாவிடம் உறுதியாக ஆதரவு கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீமானுக்கு கடும் கண்டனம்: கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பேனா சின்னம் அமைத்தால்  உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார். அதற்கான காரணத்தை அவர்தான் தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும். கலைஞர் மிகப்பெரிய கட்சியின் தலைவர், இன்றைக்கு அவருக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பது எதனால் என்று  விளக்கம் வேண்டும். ஒரு நல்ல நோக்கத்துக்காக அதை செய்கிறார்கள். அதை பாராட்ட வேண்டும். அதனால், என்ன பயன் என்பதை கலந்து பேசி நல்ல பதிலை அறிவிப்போம். கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

* எடப்பாடி அணி அதிர்ச்சி

அதிமுக எடப்பாடி அணிக்கு எதிராக தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை ஓபிஎஸ் நிறுத்தி இருப்பது எடப்பாடி அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் முருகன் முதலியார் சாதி சங்கத்தில் உள்ளார். மேலும் இவரது தந்தை பாலகிருஷ்ணன் முதலியார் சாதி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். எனவே அதிமுக இபிஎஸ் அணியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை செந்தில் முருகன் எளிதில் பெற முடியும். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி நிறுத்தி உள்ள வேட்பாளரின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு கருதுகின்றனர். செந்தில் முருகனுக்கு (42) இன்னும் திருமணம் ஆகவில்லை. ஈரோடு வளையக்கார வீதியில் வசித்து வருகிறார். எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில்முருகன் லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்தார். கொரோனோ காலகட்டத்தில் இந்தியா திரும்பிய நிலையில் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். ஒருங்கிணைந்த அதிமுகவில் உறுப்பினராக இருந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் என கட்சி பிரிந்த நிலையில், இவர் ஓபிஎஸ் அணிக்கு மாறினார்.

Related Stories: