சாலையை சீரமைக்க வேண்டும்: ஊனமாஞ்சேரி கிராம மக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊனமாஞ்சேரி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான கோயில் திருவிழாவை நடத்த, அப்பகுதி சாலைகளை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊனமாஞ்சேரி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு  கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் ஆண்டுதோறும் இரவு நேரத்தில் கிராம மக்கள் திருவிழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம்.

அதேபோல், இக்கிராமத்தில் வரும் 5ம் தேதி இரவு திருபார் வேட்டை திருவிழா நடத்த கிராம மக்கள் திட்டமிட்டு உள்ளனர். எனினும், இங்கு ஊனமாஞ்சேரி முதல் நல்லம்பாக்கம் வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் கோயில் திருவிழாவை நடத்த முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர். இந்த சாலையை சீரமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவரும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பாமக செயலாளருமான மகேந்திரன், செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக செயலாளர் காயார் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் நித்யானந்தம், நகர செயலாளர் நாகராஜ் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில், ஊனமாஞ்சேரி முதல் நல்லம்பாக்கம் வரையிலான சாலை மற்றும் மலைப்பாதையை உடனடியாக சீரமைத்து, தற்காலிகமாக மின்விளக்குகள் அமைத்து தந்து, கோயில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: