ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எங்கள் வேட்பாளர் செந்தில் முருகன்.! பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளர் வாபஸ்.! ஓபிஎஸ் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பல்வேறு கட்சினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காததாலும், இரட்டை இலை சின்னம் பிரச்சனையாலும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர்.

நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று காலை ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு  வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர்; வேட்பாளர் செந்தில்முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை சின்னம் என்னால் முடங்கும் சூழல் உருவாகாது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன். சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கையெழுத்து கேட்டால் போட்டு தரத் தயார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. உச்சநீதிமன்ற விசாரணையின் போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம். அதிமுகவின் செயல்பாட்டை தீர்மானிக்க வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்தான். அதிமுக விவகாரம் குறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல.

பாஜக நிலைப்பாடு

பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றுவிடுவோம். பாஜக நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக அவசரப்பட வேண்டாம். பாஜக போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார். தேசியக் கட்சியான பாஜகவை, முடிவு எடுக்கும்படி நிர்பந்திக்க முடியாது. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனிச் சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார். மரியாதை நிமித்தமாகவே பாஜகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

சீமானுக்கு கண்டனம்

கலைஞரின் பேனா சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னம் வைத்துள்ளோம், அதனால் கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைப்பது பற்றி பொதுவாக எதுவும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பன்னீர்செல்வம், பழனிசாமி இரு தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர திட்டமிட்டுள்ளதால் சின்னம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: