Beat the Heat!

நன்றி குங்குமம் டாக்டர்

சரும நல மருத்துவர் ஷர்மதா குமார்

வடமேற்கு, மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்கள் அனைத்திலும் கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கும்போதே அதனோடு சேர்ந்து பல உடல்நலப் பிரச்னைகளும் இணைந்தே வருகின்றன. இந்த பருவகாலத்தின்போது சிறிய அளவில் அடிக்கடி உணவு உண்பதை அல்லது சரியானவற்றை சரியான அளவில் உண்பதை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வெப்பத்தாக்கம் (ஹீட் ஸ்ட்ரோக்), அமிலத்தன்மை அதிகரிப்பு, மின்பகுளி இழப்பு (எலக்ரோலைட் இழப்பு) மற்றும் தாங்குதிறனின்மை ஆகிய அனைத்து பிரச்னைகளையும் வெப்பநிலை அதிகரிக்கும் இக்கோடை மாதங்களில் சரியான ஊட்டச்சத்து உணவின் மூலம் நாம் சமாளிப்பது அவசியம். உடலில் உட்புறத்திலுள்ள உறுப்புகளுடன் ஒப்பிடுகையில், நமது உடலின் சருமமும், தலைமுடியும்தான் மிக அதிகமாக தாக்கத்திற்கு வெளிப்படுகிற உடற்பகுதிகளாக இருக்கின்றன.

இவைகளுக்கு அதிக அளவிலான தனிச்சிறப்பான கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. வெப்பத்தை வெல்வது எளிதானதல்ல. எனினும், கோடையின் வெப்பத்தாக்கத்தின் தீவிரத்தை சமாளிப்பதற்கு சில வழிமுறைகள் நமக்கு உதவக்கூடும்.

சரும பாதிப்புகள்

கோடைப்பருவம் வருவதற்கு முன்பே வெப்ப கொப்புளங்கள், பருக்கள், எண்ணெய் படிந்த சருமங்கள், நிறம் மாறுதல், உடலில் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஆகியவை குறித்த அச்சம் நமக்கு வருவது இயல்பானதே. கோடைக்காலத்தின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான உடலின் ஒரு சமாளிப்பு இயக்கமுறையாக நமது உடல் அதிக அளவு வியர்க்கிறது. இதன்மூலம் இயல்பான உடல் வெப்பநிலை பராமரிப்பை நமது உடல் உறுதி செய்கிறது. இதனால், அதிக எண்ணெயை சரும சுரப்பி உருவாக்குவது தூண்டிவிடப்படுகிறது. இதன் விளைவாக வெளிப்படுகிற அதிக அளவிலான எண்ணெய், சருமத்துளைகளை அடைத்து விடுவதால், கொப்புளங்கள், பருக்கள் மற்றும் சொறி / தடிமன்கள் வெளிப்படுகின்றன.

தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் தக்கவைத்துக் கொள்வது நமது உடலிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியில் கொண்டு வந்து வெளியேற்ற உதவக்கூடும். கற்றாழை (ஆலோ வேரா பேக்) மற்றும் ஃபுல்லர்ஸ் எர்த் மாஸ்க் போன்ற வீட்டு நிவாரண வழிமுறைகளையும் இக்கோடைக்காலத்தில் கூடுதலாகப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தின் மேற்பகுதியில் தங்கி உயிர் வாழ்கின்ற ஈஸ்ட் நுரைம உயிரினங்கள் பல்கிப் பெருகுவதற்கான தளமாகவும் வெப்பம் இருக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் நமது கைகளிலிருந்து, உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக, டினியா வெர்சிகலர் என அழைக்கப்படும் ஒரு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஈஸ்ட் தொற்று, நமது மார்பு, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் நிறமாற்றத்தையும் மற்றும் செதில் போன்ற தோல் அழற்சி போன்ற புள்ளிகளையும் ஏற்படுத்துகிறது. அதிக எண்ணிக்கையில் பெண்களை இந்நோய் பாதிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலாக, அதிக சேதத்தை ஏற்படுத்தும் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் நமது சருமத்தின் மெலனின் நிறமிகளை அடிக்கடி தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  சூரியனின் தாக்கத்திலிருந்து இந்த மெலனின் தான் நமது சருமத்தை பாதுகாக்கிறது என்றபோதிலும், இப்பாதிப்பு நிலை மிக அதிகமாக இருக்கும்போது சருமம் இன்னும் கருமையடைவதற்கு இது வழிவகுக்கிறது. புற ஊதாக்கதிர்கள் மற்றும் வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு சன் டேன் தயாரிப்பை பயன்படுத்துவது ஆபத்தானதாக இருக்கக்கூடும்.  

ஏனெனில், பாதுகாப்பான சன் டேன் (சூரிய ஒளிக்கு வெளிப்படுவதனால் சருமம் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திற்கு மாறுதல்) என்ற ஒரு விஷயம் இல்லை. மருத்துவத்தைப் பொறுத்தவரை, கொளுத்தும் சூரிய வெளிச்சத்திற்கு எதிராக, உடலின் தற்காப்பு இயங்குமுறை செயல்படுவதன் ஒரு விளைவே சன் டேன்.

எனினும், சூரிய வெளிச்சத்தில் அளவுக்கு அதிகமாக இருப்பதனால், சருமம் பாதிப்பிற்கு உள்ளாகும் இடரை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. புற ஊதாக்கதிர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பது மற்றும் சரும சேதம் ஆகியவற்றின் வெளிப்படையான அடையாளங்களை காட்டுகிற தோல் சிவந்த நிலை என்ற பாதிப்பை இது விளைவிக்கும்.

வராமல் முன்தடுப்பதே வந்தபின் சிகிச்சையளிப்பதை விட சிறப்பானது என்பதால், நல்ல சருமப்பராமரிப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது வைட்டமின் சி, நியாசினமைடு போன்ற உட்பொருட்களைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளை பயன்படுத்துவது கோடைக்காலத்தில் மக்களுக்கு மிக முக்கியமானது. இப்பொருட்கள் ஆல்கஹால் சேர்க்கப்படாதவையாகவும் மற்றும் பயன்படுத்துவோரின் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தாதவையாக இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அடிக்கடி நீர் மற்றும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளை உட்கொள்வதும் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைப் பேணுவதும் கோடைக்காலத்தை சமாளிப்பதற்கான மிக அடிப்படை அம்சங்களாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்டது போன்ற சுய பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது சருமத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தவில்லை எனில், சரும மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது இன்றியமையாதது.

மருத்துவ அவசரநிலைகள்

அனல் வீசுகிற கடுமையான கோடைக்காலத்தில் அவசரநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைகளைத் தேடிச் செல்லும் நிகழ்வுகளும் அதிகரிக்கின்றன. கடுமையான நீர்ச்சத்து குறைவின் விளைவான பாதிப்பிலிருந்து உயிருக்கு ஆபத்தான வெப்பத்தாக்கம் (ஹீட் ஸ்ட்ரோக்) வரை பலதரப்பட்ட பாதிப்புகள் குறித்து கோடைக்காலத்தில் மக்கள் கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியம்.

ஹீட் ஸ்ட்ரோக் என்பது, கடுமையான வெப்பம் நிலவுகின்ற நேரத்தில் அதிக நேரம் சூரியஒளிக்கு வெளிப்படுவது அல்லது உடலுழைப்பை மேற்கொள்வதன் விளைவாக நமது உடல் அளவுக்கு அதிகமாக சூடாகும்போது ஏற்படுகின்ற ஒரு பாதிப்பாகும். 104 டிகிரி பாரன்ஹீட் (40 டிகிரி செல்சியஸ்) அல்லது அதற்கு அதிகமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது உயிருக்கு ஆபத்தான இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.

அதிகரிக்கிற உடல் வெப்பநிலை தவிர, மாற்றம் கண்டிருக்கும் நடத்தை மனநிலை, அளவுக்கு அதிகமாக வியர்த்தல், குமட்டல், சூடான சருமம், அதிவேக சுவாசம், இதயத்துடிப்பு விகிதம் கடுமையாக அதிகரிப்பு மற்றும் தலைவலி போன்றவையும் ஹீட் ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் பிற தீவிர அறிகுறிகளாகும். மிக சூடான சூழலுக்கு வெளிப்படுவது மட்டும் ஹீட் ஸ்ட்ரோக் அல்ல; உடலுழைப்பு அதிகமாக தேவைப்படும் தீவிர செயல்பாடுகளும் இதை விளைவிக்கக்கூடும். சூடான பருவநிலையின்போது அளவுக்கு அதிகமாக தீவிரமான உடற்பயிற்சிகளை செய்கின்ற நபர்களுக்கும், வெப்பத்தாக்கத்தினால் ஏற்படும் ஸ்ட்ரோக் நிகழக்கூடும்.

எனினும், அதிக வெப்பமான பருவநிலைகளுக்குப் பழக்கமில்லாத நபர்களுக்கே இதுபோன்று பாதிப்பு நிகழ்வதற்கு அதிக சாத்தியமிருக்கும். இப்பாதிப்பு நிலையானது, மூளையையும் மற்றும் பிற முக்கிய உடலுறுப்புகளையும் விரிவாக்கிவிடும். உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்கு உடனடியாக போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், திரும்பவும் சரி செய்ய முடியாத கடும் பாதிப்பை இது உருவாக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாகவும் மற்றும் உரியவாறும் இப்பாதிப்பிற்கு சிகிச்சையளிக்கப்படவில்லை எனில், உயிரிழப்பும் ஏற்படக்கூடும்.

நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகள் அவசரசிகிச்சையைப் பெறுவதற்கு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அதிக இடர்வாய்ப்பில் இருக்கின்றனர். கடுமையான வெப்ப அலை தாக்கத்தின்போது தங்களுக்கு ஏற்படும் இடர்வாய்ப்பை பல நேரங்களில் குறைத்து மதிப்பிடுவதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

உடலில் நீர்ச்சத்து இழப்பு என்பது, சில நேரங்களில் உதாசீனம் செய்யக்கூடிய ஒரு சிறிய பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால், இதை அலட்சியம் செய்வோமென்றால், கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரும் பிரச்சனையாக இது விரைவில் உருவாகக்கூடும். நீர்ச்சத்து இழப்பு என்பது, அனைத்து வயது பிரிவிலும் உள்ள நபர்களை பாதிக்கக்கூடியது; மருத்துவ சிகிச்சையையும், கவனிப்பையும் பெறுவதற்கான தேவை இதனால் ஏற்படக்கூடும். உடலில் நீர்ச்சத்து குறைவதனால் தலைசுற்றல், மயக்கநிலை, மார்பில் அசௌகரியம் அல்லது வலிப்புத் தாக்கங்கள் ஏற்படும்போது உடனடியாகவே மருத்துவர் உதவியை நாடிப்பெறுவது நல்லது.

அனல் வீசும் கோடையின் கடுமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும், அதுகுறித்து சரியான தகவல்களை அறிந்திருப்பதும் முக்கியம். இல்லையெனில், ஒரு சிறிய, சாதாரண பிரச்னை உயிருக்கே அச்சுறுத்தலாக மாறுவதற்கு நீண்டநேரம் எடுக்காது என்பதை  நினைவில் கொள்வது இன்றியமையாதது.

தொகுப்பு -  எஸ்.கே.ஞானதேசிகன்

Related Stories: