எந்த மருந்து தட்டுப்பாடு என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு மருந்துகள் அனுப்ப தயாராக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஈரோடு: அரசு மருத்துவமனைகளில் என்ன மருந்து தட்டுப்பாடு உள்ளது என்று கூறினால் ஓபிஎஸ் வீட்டுக்கு அந்த மருந்தை அனுப்ப தயாராக உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக தேர்தல் பணிமனையை திறந்துவைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம் மருத்துவக்கல்லுாரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அவருக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன். மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 1.01 கோடி பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இது, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாகும். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை என்று அவர் சொன்னால், அவருக்கும், கவர்னருக்கும்தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே அவர், கவர்னரிடம் சென்று கேட்க வேண்டியதுதானே. அவர்தான், நியமிக்கும் அதிகாரம் படைத்தவர். அத்தியாவசிய மருந்துகள் இல்லை என்று அவர் பொதுவாக கூறுகிறார்.

அவ்வாறு எங்கு இல்லை எனக்கூறினால், அங்கு உடன் அனுப்ப தயாராக உள்ளோம். ‘எசன்சியல் டிரக்’ என 300க்கும் மேற்பட்ட மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்கிறோம். மருந்து இல்லை என்றால், 104 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம் என கேட்டுள்ளோம். இதுவரை, எங்கும் புகார் வரவில்லை. எந்த மருத்துவமனையில், எந்த மருந்து இல்லை என பன்னீர்செல்வம் கூறினால், உடனடியாக அம்மருந்தை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: