திருவாரூர் அருகே பயங்கரம்: விசி பிரமுகர் வெட்டிக்கொலை.! பாஜ பிரமுகர் உள்பட 6 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அக்கரை தெருவை சேர்ந்தவர மதியழகன். இவரது மகன் கவியரசன்(22). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை கழக பொறுப்பாளராக இருந்தார் தண்டலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். குடவாசல் அடுத்த திருக்கண்ணமங்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து நேற்று நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக திருக்கண்ணமங்கைக்கு பைக்கில் கவியரசன் சென்றார். இதன்பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டுக்கு பைக்கில் கவியரசன் திரும்பினார். அம்மையப்பன் செல்லும் சாலையில் வந்தபோது பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், கவியரசனை வழிமறித்து கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே கவியரசன் பரிதாபமாக இறந்தார்.  

குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கவியரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் சிவன்கோவில் அருகே உள்ளதென்னந்தோப்பில் குடவாசல் விசிக பொறுப்பாளர் கவியரசன் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக எடையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சென்று  தென்னந்தோப்பை சுற்றிவளைத்து திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சின்னகாளி (எ) காளிதாஸ்(25), ரவி மகன் பெரியதம்பி(30), கோபி மகன் வசந்தகுமார்(22), தங்கவேல் மகன் சந்தோஷ்(20), கலைமணி மகன் சபிநாதன்(26), பின்னத்தூர் உலகநாதன் மகன் அபிஷேக்(25) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் விசிக பிரமுகர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இவர்கள் பயன்படுத்திய ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருவாரூர் அழைத்து சென்று 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காளிதாஸ் என்பவர் பாஜகவில் இருப்பது தெரியவந்தது. திருவாரூர் அம்மையப்பனை சேர்ந்த பாஜ பிரமுகர் ஜனரத்தினம் ஏற்பாட்டின்பேரில் சில வாரங்களுக்கு முன் அந்த பகுதியில் பாஜ கட்சி கொடியை மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் ஏற்றி வைத்தார். இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த காளிதாஸ், கவியரசன் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதைதொடர்ந்து கவியரசன் கொலை வழக்கில் குடவாசல் அம்மையப்பன் பகுதியை சேர்ந்த பாஜ மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சிவகாளிதாஸ், அரசவனங்காட்டை சேர்ந்த கணேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: