நெய்வேலி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நெய்வேலி : நெய்வேலி அடுத்த இந்திரா நகர் மற்றும் வடக்குத்து ஊராட்சி பகுதியில் உள்ள கடைவீதி உள்ளிட்ட முக்கியமான சாலை பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள் அச்சமுடன் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக இந்திரா நகர் பகுதியில் காய்கறி கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் மாடுகள் தலையை விட்டு காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருள்களை தின்று சேதப்படுத்துகின்றன.

இதனால் வியாபாரிகள் நஷ்டத்திற்குள்ளாகின்றனர். இதேபோல வடக்குத்து ஊராட்சியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றது. மேலும் விக்கிரவாண்டி- கும்பகோணம்  தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள கிராம மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கட்டவிழ்த்து விடுகின்றனர். கால்நடைகள் மேய்ந்து கொண்டிக்கும்போது ஆடு, மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே கூட்டமாக பாய்ந்து ஓடுகின்றன.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் கார், சரக்கு வேன், பைக் உள்ளிட்ட வாகனங்கள் கால்கடைகள் மீது மோதாமலிருக்க பக்கவாட்டில் திருப்பும் போதோ அல்லது பிரேக் பிடிக்கும்போதோ வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து  விபத்திற்குள்ளாகின்றது. இதனால் வாகன விபத்துக்கள் அதிகரிப்பதோடு வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்திரா நகர் மற்றும் வடக்குத்து ஊராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அப்பகுதியில் கால்நாடை வளர்ப்போருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: