பழையாற்றில் ஆக்ரமிப்பை கண்டறிந்து 2,052 எல்கை கற்கள் போடப்பட்டுள்ளன-ஒழுகினசேரி வரை அளவீடு பணி நிறைவு

நாகர்கோவில் :  பழையாற்றில் ஆக்ரமிப்பை கண்டறியும் வகையில் எல்கை அளவீடு செய்து, இதுவரை 2052 கற்கள் நடப்பட்டுள்ளன. கலெக்டர் மாற்றத்தால் இந்த பணி பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.குமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்குவது பழையாறு. உரிய பராமரிப்பு இல்லாததால் பல்வேறு இடங்களில் ஆகாயதாமரைகள் மண்டியும், கழிவு நீர் கலந்தும் ஆறு நாசமாகி விட்டது. மறுபுறம் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டுவருகிறது. மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் 17.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து பழையாறு உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு 36 கி.மீ தூரம்  கடந்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாற்றின் மூலம் 16 ஆயிரத்து 550 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயனடைகின்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்திற்கு மட்டுமின்றி வழியோர கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் பழையாறு விளங்கி வருகிறது. இந்த ஆற்றை நம்பி பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படவும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பழையாற்றை மீட்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் இணைந்து நமது பழையாறு புனரமைப்பு இயக்கத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கினர். இந்த இயக்கம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்புடன் இணைந்து சுருளோடு முதல் மணக்குடி வரை பழையாற்றில் எவ்வளவு ஆக்ரமிப்பு இருக்கிறது என சர்வே எடுத்து எல்லை நிர்ணயம் செய்தது. டிபரன்சியல் குளோபல் போசிசனிங் சிஸ்டம்’ (டிஜிபிஎஸ்) அளவீடு செய்யும் பணி தொடங்கியது. 2021 ல் இந்த பணியை தொடங்கினர்.

மழை பெய்ய தொடங்கியதால், இந்த பணிகள் தொய்வு ஏற்பட்டது. பழையாறு கடந்த காலத்தை விட மூன்றில் ஒரு பகுதியாக சுருங்கிவிட்டது என்று இந்த அமைப்பின் திட்ட ஆலோசகர் விதுபாலா கூறினார். பழையாறை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு, கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. ஹரிகிரன்பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. பழையாற்றை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் முழு ஒத்துழைப்பு வழங்கினார். கலெக்டரின் உத்தரவின் பேரில் பழையாற்றின் எல்கை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த நிலையில் கலெக்டர் அரவிந்த் தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த பணிகள் எந்தளவு தொடரும் என்பது தொடர்பாக பழையாறு புனரமைப்பு இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் கூறுகையில், பழையாற்றில் அளவீடு  பணி 33 கி.மீ. முடிவடைந்துள்ளது. இதுவரை 13 கி.மீ. எல்கை கல்  போடப்பட்டுள்ளது. நமது பழையாறு புனரமைப்பு இயக்கம் சார்பில் 1,452 எல்கை  கற்களும், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு சார்பில் 600 எல்கை  கற்களும் என மொத்தம் 2052 எல்கை கற்கள் போடப்பட்டுள்ளன.

 தற்போது ஒழுகினசேரி வரை அளவீடு பணி முடிந்தது. இனி ஒழுகினசேரியில் இருந்து தொடங்கி கோதைகிராமம், சுசீந்திரம், வடக்குதாமரைக்குளம், மணக்குடி பகுதிகளில் தான் அளவீடு செய்யப்பட வேண்டி உள்ளது. மழை உள்ளிட்ட பிற காரணங்களால் இந்த பணி நடைபெறாமல் உள்ளது. விரைவில் அளவீடு செய்ய உள்ளோம். கலெக்டர் அரவிந்த், பழையாற்றை மீட்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்.

தற்போதைய நிலையில் பழையாறு 60 சதவீதம் ஆக்ரமிப்பில் தான் உள்ளது. இந்த ஆக்ரமிப்பை அளந்து, சுமார் 5 கி.மீ. தூரம் எந்த மாதிரியான ஆக்ரமிப்புகள் உள்ளன. இதை எவ்வாறு அகற்றலாம் என்பதற்கான மாதிரியை (சாம்பிள்) தருமாறு கலெக்டர் கேட்டு இருந்தார். இதை தயார் நிலையில் வைத்து உள்ளோம். புதிய கலெக்டரிடம் இதை ஒப்படைக்க உள்ளோம். இந்த 5 கி.மீ. தூரத்தில் தனியார்கள் பலர் பழையாற்றின் கரையை ஆக்ரமித்து தோட்டங்கள் அமைத்துள்ளனர். சிலர் கட்டிடங்கள் கட்டி உள்ளனர் என்றார்.

Related Stories: