விலை குறைவாக இருப்பதால் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய முயல வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

கமுதி : கமுதி சுற்று வட்டார பகுதியில் பருத்தி கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சாமிபட்டி, செங்கோட்டைபட்டி, மேட்டுபட்டி சேர்ந்தகோட்டை, கீழவலசை சங்கரப்பன்பட்டி போன்ற பகுதிகளில் மட்டும் பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த வருடம் சரிவர பருவமழை பெய்யாததால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் பேரையூர் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு தனது 10 ஏக்கர் நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளதாகவும், இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளதாகவும், தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளதாகவும் விவசாய பணிகள் செய்வதற்கு கூலி ஆட்கள் நியமித்தால் மிகப் பெரிய நஷ்டம்தான் வரும்.இதனால் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, தற்போது ஒரு கிலோ பருத்தி ரூ.60ல் இருந்து ரூ.70 வரை தான் கொள்முதல் ஆகிறது. இதனால் பாதிப்படைந்து உள்ளோம். இந்த கொள்முதல் விலை மிகவும் குறைவு என்றும், மேலும் விளைபொருட்களை கொள்முதல் நிலையத்திற்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதற்கும் அதிக செலவு ஆகிறது. இதனால் விவசாயிகள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு முன் வந்து பருத்தியை அதிக விலைக்கு கொள்முதல் செய்தால் தான், விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறினார். மேலும், மிளகாய், நெல் விவசாயம் பருவமழை பொய்த்ததால் முற்றிலும் வீணாகி விட்டது. இதற்குரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று, இப்பகுதி விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: