போரூர் அருகே மெட்ரோ ரயில் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்தது வேன்: டிரைவர் கவலைக்கிடம்

பூந்தமல்லி: போரூர் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டார். கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த காளசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (22), லோடு வேன் டிரைவர். இவர், நேற்று காலை சென்னை போரூரில் வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி புறப்பட்டார். போரூர் தனியார் மருத்துவமனை எதிரே மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன் அருகில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த  வேன், சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில், டிரைவர் ராஜேஷ் வேனுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிரேன் உதவியுடன் லோடு வேனை வெளியில் தூக்கி படுகாயத்துடன் இருந்த ராஜேஷை உயிருடன் மீட்டனர். இதில், லேசான காயங்களுடன் கிளீனர் உயிர் தப்பினார். இதையடுத்து, ராஜேஷை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: