ஆக்ஸ்போர்டு அகராதியில் 800 வார்த்தைக்கு இந்திய ஆங்கில உச்சரிப்பு சேர்ப்பு

புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் 800 வார்த்தைகளுக்கான இந்திய ஆங்கில உச்சரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய ஆங்கிலத்துடன் தொடர்புடைய ‘தேஷ்’ (தேசம்) மற்றும் ‘பிந்தாஸ்’ (குளிர்), `தியா’ (விளக்கு), `பச்சா’ (குழந்தை அல்லது விலங்கின் குட்டி) போன்ற 800க்கும் மேற்பட்ட இந்திய ஆங்கில உள்ளீடுகளுக்கான உச்சரிப்பு தற்போது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பிரசுரத்தின்படி, உலகின் மொத்த உச்சரிப்பு வகைகளின் எண்ணிக்கையில் இந்திய ஆங்கிலத்தையும் சேர்த்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 16 வகைகளை உள்ளடக்கி உள்ளது.

இது குறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் உச்சரிப்புக்கான ஆசிரியர் கேத்தரீன் சங்ஸ்டெர் கூறிய போது, ``பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் தவிர பல்வேறு ஆங்கில உச்சரிப்புக்கான ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் ஆடியோ கவரேஜில் இந்திய ஆங்கிலத்துக்கு ஆக்ஸ்போர்டு மிகப் பெரிய முன்னுரிமை அளிக்கிறது. இது ஆக்ஸ்போர்டு சந்திக்கும் சவால்களில் மிகப் பெரிய ஒன்றாகும்,’’ என்று தெரிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை கடந்த 2016ம் ஆண்டில் இருந்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சேர்த்து வருகிறது.

Related Stories: