நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக  இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. முதன்மை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தயாரித்த 414 பக்க பொருளாதார ஆய்வறிக்கை, மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நடப்பு 2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளுக்கு மத்தியிலும் இதற்கான சாத்தியங்கள் உள்ளன. உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக வெளியிட்ட கணிப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சர்வதேச அளவிலான அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப  6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பிற நாடுகளில் பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா உட்பட பல நாடுகளிலும் பொருட்கள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே இந்த கணிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பண வீக்க விகிதம் 6 சதவீதத்துக்கு கீழ்தான் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது 7.8 சதவீதம் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. பண வீக்கம் குறைந்தது, தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்ததற்கு, மூலதன முதலீடுகள் மற்றும் தேவை அதிகரிப்பு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது. முன்பு, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டுக்கான  பண வீக்கத்தை 6.8 சதவீதமாக கணித்திருந்தது. இந்தியா, மக்களின் வாங்கும் திறன் சமநிலையை பொறுத்தவரை 3வது பெரிய பொருளாதார நாடாகவும், அந்நியச்செலாவணியை பொறுத்தவரை  5வது பெரிய பொருளாதார நாடாகவும் திகழ்கிறது.

அமெரிக்க பெடரல் வங்கி  வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தடுப்பதில் சவால் நீடிக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பும், ரூபாய் மதிப்பு சரிவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சியை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் 2வது அரையாண்டில் சற்று குறவைாக உள்ளது. உலக பொருளாதார மந்த நிலை மற்றும் உலக அளவிலான வர்த்தகத்தில் பாதிப்பு ஆகியவையே இதற்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில்,  நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, ஜிடிபியில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளதே இதற்கு காரணம். இந்த பற்றாக்குறை, இதற்கு முந்தைய ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2.2 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஆண்டிலும் தொடர வாய்ப்பு உள்ளதால், இது குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களைப் பொறுத்தவரை, கடன் வழங்குதல் நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டம், பொருளாதார பாதிப்பில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டு வர மிகவும் உதவியாக இருந்தது. ஒன்றிய அரசின் மூலதன செலவினம், கடந்த 2022-23 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 63.4 சதவீதம் அதிகரித்தது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில்,ரூ.7.5 லட்சம் கோடி மூலதன செலவின பட்ஜெட் இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பிஎப் சந்தாதாரர் தொடர்பான புள்ளி விவரங்களின் அடிப்படையில், புதிய சந்தாதாரர்கள், அதாவது தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2020-21 நிதியாண்டை விட 2021-22 நிதியாண்டில் 58.7 சதவீதமும், 2018-19 நிதியாண்டை விட 55.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. மாதாந்திர சராசரி சந்தாதாரர் எண்ணிக்கை கடந்த 2021 ஏப்ரல்  நவம்பரில் 8.8 லட்சமாக இருந்தது, கடந்த ஆண்டு ஏப்ரல் நவம்பரில் 13.2 லட்சமாக அதிகரித்துள்ளது. விவசாயம் சிறப்பாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மோசமான விளைவுகள், இடுபொருள் செலவு அதிகரிப்பு போன்றவற்றால் சவால்களை சந்தித்து வருகிறது. இதனால், இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: