விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்தவருக்கு ஜாமீன்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவருக்கு ஒரு லட்சம் பிணை தொகையுடன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் வைத்து டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி முதல் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இருந்து சங்கர் மிஸ்ரா ஜாமீன் கேட்ட வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹர்ஜ்யோத் சிங் பல்லா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில்,‘‘ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்குவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories: