அதிமுகவை கழற்றிவிட முடிவா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜ: ஓரிரு நாளில் பாஜ நிலைப்பாடு குறித்து அறிவிப்பு; நாராயணன் திருப்பதி பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இறுதி முடிவெடுக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், முடிவு எடுக்க முடியாமல் பாஜ திணறி வருகிறது. இதனால், ஓரிரு நாளில் பாஜ தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தான் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக போட்டி போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், அதிமுக விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிட எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜ இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இவர்களில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினாலும், அது நாடாளுமன்ற தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடுமே என்ற யோசனையும் அக்கட்சிக்கு உள்ளது.

அதனால், கூட்டணியில் உள்ள அதிமுகவையும், வரும் நாடாளுமன்ற தேர்தலையும் கணக்கில் வைத்து, அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தீவிர ஆலோசனையில் இறங்கி வருகிறது. இப்போதைக்கு கூட்டணியில் தனித்தனி நிலைப்பாடு நிலவி வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியிலும் எதிரொலிக்குமா என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில், அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து ஆதரவளிக்கலாம் அல்லது அவர்கள் இணையவில்லை என்றாலும் நாமே களத்தில் இறங்கி போட்டியிடலாம் அல்லது யாருக்கும் ஆதரவின்றி ஒதுங்கிவிடலாமா என்றெல்லாம் பாஜவின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் அதிமுகவின் இரு அணிகளும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் அவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவு கொடுக்க கூடாது என்று பாஜ முக்கிய நிர்வாகிகள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வெகு விரைவில் தமிழக பாஜ தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ என்ன முடிவை எடுக்கப் போகிறதோ என்ற பதைபதைப்பில் ஓபிஎஸ்சும் உள்ளதாக தெரிகிறது. அதனால் தான் தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க போவதாக, தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. எனினும், தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துவிட்டு, பாஜ ஏன் இன்னமும் தனது முடிவை அறிவிக்கவில்லை என்ற குழப்பமும், சந்தேகமும் நிலவியபடியே உள்ளன.

மேலும், இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்குமே கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேச்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அண்ணாமலை கூறியதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல குழப்பங்களால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் தமிழக பாஜ திணறி வருகிறது.

இந்நிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திட்டமிட்டார். அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது  குறித்து பாஜ மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பாஜ தலைமை அலுவலகமான கமலாலயதத்ில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர்  அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில மைய குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள்  இதில் கலந்து கொண்டனர்.

தமிழக பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவில் உள்ள இரு அணிகளில் யாருக்கு ஆதரவு கொடுப்பது அல்லது நடுநிலை வகிப்பதா என்பது  குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அதிமுக இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காதபட்சத்தில் அதிமுகவை கழற்றி விட்டுவிட்டு தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு சிலர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் நடுநிலை வகிக்கலாம் என்றும் சிலர் நாமே போட்டியிடலாம் என்றும் தெரிவித்தனர். ஒரு சிலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால் முடிவு எடுக்க முடியாதநிலை ஏற்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, ‘‘தமிழக பாஜ சார்பில், ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 471 நாட்கள் அண்ணாமலை தலைமையில் நடைபயணம் நடைபெற உள்ளது. அதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பாக பாஜ இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓரிரு நாட்களில் பாஜ தலைமை தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும். அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட பெரும்பாலான பாஜ நிர்வாகிகள் விரும்புகின்றனர். இடைத்தேர்தலில் வெற்றியை பெற மிக வேகமாக செயல்பட்டு வருகிறோம். எங்களின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது தவறில்லை’’ என்றார்.

* மேலிட தலைவர் தருண் சூக் சென்னையில் முகாம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முடிவெடுக்க முடியாமல் தமிழக பாஜ திணறிக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பது குறித்து மேலிட தலைவராக, தேசிய பாஜ பொதுச் செயலாளர் தருண் சூக் என்பவர் சென்னை வருகிறார். அவர் 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிட உள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜ மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளரை தேர்வு செய்வதா அல்லது ஆதரவு தெரிவித்து தேர்தல் பணிகளை பிரித்து கொடுப்பதா என்பது பற்றி ஒரு தீர்கமான முடிவை எடுத்த பின்பே சென்னையில் இருந்து புறப்பட உள்ளதாகவும் தமிழக பாஜ நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.

Related Stories: