நிகழ்கால சிவனடியார்கள் - சிவாங்கா!

பாரத கலாச்சாரத்தில் ஆன்மீகத்தின் வேர்கள் மிக ஆழமாக சென்றுள்ளதை மக்களின் பக்தியில் உணர முடியும். இந்த மண்ணில் கடவுளை நமது நல்வாழ்விற்கான மீட்பராக மட்டும் பார்ப்பதற்கு மாறாக, முக்திக்கு வழிகாட்டியாக பார்க்கிறோம். பக்தி மார்க்கத்தை பெரும்பான்மையாக கொண்ட இந்த மரபில் பல அடியார்கள் பக்தியில் கரைந்து முக்தி அடைந்திருப்பதாக பல வரலாறுகள் உள்ளன.

அப்படியொரு நாயன்மார்தான் காரைக்கால் அம்மையார். தென்னிந்தியாவின் முக்கியமான வணிக நகராக விளங்கிய காரைக்காலில் பிறந்து சிவபக்தியினால் இறைவனைக் காண அம்மையார் கயிலாயம் சென்றபோது கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார்.

இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலில் வீற்றிருக்கலானார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே. அனைவருக்கும் அம்மையப்பனாக இருக்கும் ஈசனே அம்மையென்று அழைக்கும் அளவிற்கான பக்தி காரைக்கால் அம்மையார் அவர்களுடையது.

இப்படி நிறைய சிவனடியார்களின் ஜீவசமாதிகளை நமது தென்னிந்தியாவின் பல பகுதிகளில் காணமுடியும். இறைவனுக்கு உள்ளத்தில் கோயில் எழுப்பிய பூசலார், தன் கண்ணையே இறைவனுக்கு வழங்கிய கண்ணப்ப நாயனார், சிவ அடையாளம் தரித்த யாராயினும் அவரையும் சிவமாகவே கண்டு வணங்கும் மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

இத்தகைய ஆன்மீக மண்ணில் இன்றைய சூழலிலும் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இருந்தபடியே சிவனடியாராக இருந்து ஈசனை தொழும் பெரும் வாய்ப்பினை தென்கைலாய பக்திப் பேரவை வழங்குகிறது.

ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப் பேரவை நடத்தும் சிவாங்கா எனும் யாத்திரை நிகழ்வை நடத்துகின்றனர். இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின்போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவுசெய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.

சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: