×

இன்னும் 2 ஆண்டுகள் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார்: பயிற்சியாளர் இவானிசெவிச் நம்பிக்கை

சிட்னி: ‘குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்துவார்’ என்று அவரது பயிற்சியாளர் கோரான் இவானிசெவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 பட்டங்கள் என்ற மகத்தான சாதனையை செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ஜோகோவிச்சின் பயிற்சியாளரான முன்னாள் டென்னிஸ் வீரர் குரோஷியாவின் கோரான் இவானிசெவிச் கூறியதாவது: தற்போது வளர்ந்து வரும் இளம் டென்னிஸ் வீரர்களுக்கு இதனை கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்னும் 3 ஆண்டுகள்... குறைந்தது 2 ஆண்டுகளாவது ஜோகோவிச், சர்வதேச டென்னிசில் ஆதிக்கம் செலுத்துவார். டென்னிஸ் விளையாட்டுக்காக அவர் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்துள்ளார். உணவு, உடற்பயிற்சி, தேவையான அளவு ஓய்வு என்று வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பெரிய டோர்னமென்ட்டையும், முழு அளவு உடல் தகுதியுடன் எதிர்கொள்கிறார். அதையெல்லாம் பார்த்து, அவருடைய பயிற்சியாளர் என்ற முறையில் நான் இதை சொல்கிறேன். ஜோகோவிச் மட்டுமல்ல... ரஃபேல் நடாலும் இன்னும் 2 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில், இளம் வீரர்களுக்கு கடும் போட்டியாளராக இருப்பார்.

14 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றுள்ள நடால், அடுத்து 15வது முறையும் அதை கைப்பற்றுவார். இருவருமே ஆடவர் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வார்கள் என்று நான் 8 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இருவரும் குறைந்தது இன்னும் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வார்கள் என்று இப்போது சொல்கிறேன். இளம் வீரர்களில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஃபேல் நடாலுக்கு சிறந்த போட்டியாளராக வருவார். கிரேக்க வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசும், நம்பிக்கை தரும் விதமாக ஆடிக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Djokovic ,Ivanisevic , Djokovic will dominate for 2 more years: coach Ivanisevic believes
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!