துணி துவைக்க சென்றபோது பரிதாபம் வால்பாறையில் ஆற்றில் மூழ்கி தாய், மகன் பலி

வால்பாறை : வால்பாறையில் துணி துவைக்க சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி பலியானார்கள்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து சேடம் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திருச்செல்வி (33). இவர்களது மகன் சஜித் (7), மகள் தீபிகா (4). மகன் சோலையார் அணை பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மகள் எல்கேஜி படித்து வருகிறார். திருச்செல்வி நேற்று வீட்டில் துணி துவைத்தார். அவருக்கு மகன் உதவி செய்தார். அப்போது திடீரென குழாயில் தண்ணீர் நின்றது.

இதனையடுத்து துணிகளை அலசுவதற்காக துணிகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள சேடல் ஆற்றுக்கு சென்றனர். அங்கு தேங்கிய நீரில் துணி அலசும் பணியில் திருச்செல்வி ஈடுபட்டார். தண்ணீரை பார்த்த ஆர்வத்தில் சிறுவன் சஜித்  அதில் இறங்கி விளையாட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தத்தளித்து அலறி சத்தம் போட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் நீரில் குதித்து மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் சிக்கி தத்தளித்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் சேடல் பகுதிக்கு சிலர் வந்தனர். கரையில் துணி மட்டும் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் அங்கு தேங்கியிருந்த நீரில் தேடியபோது சஜித், திருச்செல்வி ஆகியோர் தண்ணீரில்  மிதந்தனர்.  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே 2 பேரையும் கரைக்கு மீட்டு முதலுதவி அளித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து  சோலையார் அணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தாய். மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று பள்ளியில் பரிசு, இன்று நீரில் மரணம்

சஜித் நேற்று முன்தினம் பள்ளி ஆண்டு விழாவில் பரிசு  பெற்று உள்ளான். விழாவில் அவரது தாயும் கலந்து கொண்டார். நேற்று மேடையில் பரிசு பெற்ற சிறுவன் இன்று தாயுடன் பிணமாக கிடப்பதை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஆற்றுக்கு சென்றதில்லை

திருச்செல்வி இதுவரை ஆற்றுப்பகுதிக்கு சென்று துணி துவைத்தது இல்லை. மகனையும் ஆற்றுக்கு விட்டதில்லை என உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: