போடி பகுதியில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

போடி : போடி பகுதியில் மாமரங்கள் பூத்துக்குலுங்குவதால் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.போடி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குரங்கணி, கொட்டகுடி, அடகுபாறை, பீச்சாங்கரை, இலங்கா வரிசை, முந்தல், முனீஸ்வரன் கோயில் பரவு, பரமசிவன் கோயில்மலை அடிவாரம், தொடாடு, மங்களகோம்பை, வடக்குமலை, வலசத்துறை, முட்டுகோம்பை, சிறக்காடு ஆகிய பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். வருடத்தில் நான்கு மாதம் சீசனாக கொண்ட இந்த விளைச்சலில் ஏக்கருக்கு சுமார் ரூ.1.50 முதல் இரண்டு லட்சம் வரை செலவு செய்கின்றனர். மேலும் இயற்கை உரம் இடுதல், மரங்களில் கவாத்தெடுத்தல், களைகள் பறித்தல், மரங்களுக்கு கீழ கின்னி போடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் என வருடம் முழுவதும் தொடர்ந்து பராமரித்து பணி செயது வருகின்றனர்.

இப்பகுதியில் காசா, செந்தூரம், பங்கனவள்ளி, காளையப்பாடி, கள்ளா மாங்காய் என பலதரப்பட்ட ரகங்களில் சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால சீசனில் அதிக பனிபொழிவால் கூடுதல் பூவெடுத்தும், பல இடங்களில் கருகியும், சரிவர மழை இல்லாத காரணத்தால் மா உற்பத்தி குறைந்தது. இதனால் கடந்த 2 வருடங்களாக விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த வருடம் பருவமழை நன்றாக பெய்ததால் தற்போது, மாந்தோப்புகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கடும் பனிப்பொழிவிலும் பூக்கள் கருகாமல் பூத்துக்குலுங்குவதால் இந்த வருடம் அதிக மகசூல் இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: