சத்துவாச்சாரி பளு தூக்கும் பயிற்சி மையத்தில் பணி நீக்கப்பட்ட பெண் பயிற்சியாளரை மீண்டும் உடனடியாக நியமிக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் வீராங்கனைகள் கோரிக்கை

வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். கூட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் மையத்தில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அளித்த மனுவில், ‘நாங்கள் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறோம். எங்களுக்கு பயிற்சி அளிக்கும் கவிதா என்பவர், கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

ஆனால் கடந்த 10ம் தேதி பயிற்சி மையத்திற்கு வருவதில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, பயிற்சி மைய மேலாளர் நோயலின்ஜான், தன்னை பணிக்கு வர வேண்டாம் என கூறி பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வரவில்லை என தெரிவித்தார். ஆனால் கவிதாவின் சிறப்பான பயிற்சியால் நாங்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றோம். தற்போது போலோ இந்தியா மற்றும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. எங்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வழி நடத்த பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்’ என தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கோளூரை சேர்ந்த லாவண்யா என்பவர் அளித்த மனுவில், ஆம்பூர் தாலுகா கண்ணாடிகுப்பம் பகுதியில் எங்களுக்கு சொந்தமான நிலம் இருந்தது. 7 ஆண்டுகளுக்கு முன் அந்த நிலத்தை சாலைப்பணிக்காக கையகப்படுத்திக்கொண்டனர். அதேபோல் பக்கத்தில் உள்ளவர்களின் நிலங்களையும் கையகப்படுத்தினர். ஆனால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு இதுவரை எங்களுக்கு மட்டும் வழங்கவில்லை.

இதுகுறித்து வருவாய்த்துறையிடம் கேட்டால், எங்கள் நிலத்தை கையகப்படுத்தவே இல்லை என்கின்றனர். நெடுஞ்சாலை துறையிடம் கேட்டால், நிலத்தை கையப்படுத்திக்கொண்டதாகவும், வருவாய்த்துறையினர் மூலம் நஷ்ட ஈடு கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு மாறி மாறி கூறுவதால் எங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வேலூர் காந்திரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் ஒருவர் ஆக்கிரமித்து கடை கட்டியுள்ளார். அதனை மீட்கவேண்டும்’ என்றனர். வேலூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அளித்த மனுவில், கடந்த ஆண்டு காட்பாடி ேஷாரூமில் பைக் வாங்கினோம். ஓராண்டு ஆகியும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஷோரூமில் கேட்டபோது, பைக்கை விற்ற ஊழியர்கள், பணத்தை நிர்வாகத்திற்கு கட்டாமல் கையாடல் செய்து விட்டதாகவும், இதனால் வாகனங்களை பதிவு செய்ய முடியவில்லை எனக்கூறிவிட்டனர்.

 மேலும் அந்த பைக்குகளையும் ஷோரூம் நிர்வாகத்தினர் எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் எங்களின் பணமும், பைக்கும் போய்விட்டது. எனவே எங்களுக்கு பைக்கை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தனர். குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த அமராவதி அளித்த மனுவில், ‘கொரோனா காலத்தில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் என்னை பணியில் இருந்த நீக்கி விட்டனர்.

தற்போது, டிபிஹெச்எஸ் மூலம் நர்சுகள் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதில் எனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்றார். இதைத்தொடர்ந்து குறைதீர்வு கூட்டத்தில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தையல் மெஷின்களை டிஆர்ஓ ராமமூர்த்தி வழங்கினார்.

Related Stories: