களக்காடு அருகே மாணவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

களக்காடு : களக்காடு அருகே மாணவ-மாணவிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இசக்கி முத்து (24). டிப்ளமோவில் விவசாய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மலையடிபுதூரில் தேன் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் தேன் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக அவரது தந்தை சேர்மத்துரை, தாயார் கமலா ஆகியோரும் தேனி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தேனீக்கள் என்றால் கொட்டும் என்ற அதீத பயம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த பயத்தை போக்கும் விதமாக முகம் முழுவதும் தேனீக்களை பரவ விட்டு மக்கள் மத்தியில் விநோத விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டொன்றுக்கு பல லட்ச ரூபாய் வருமானத்தை பெற இயலும் என்பதை முன்னிறுத்தி இவரது விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நேற்று மலையடிபுதூரில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடத்தினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேனீக்கள் வளர்ப்பு குறித்து செயல் விளக்கமும் அளித்தார்.

 இதுபற்றி இசக்கிமுத்து கூறுகையில், ‘தேனீக்கள் வளர்ப்பை முழுமையாக ஆராய்ந்து செயல்பட்டால் தமிழகத்தில் விவசாய துறை கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இத்தொழிலுக்கு மாறும் நிலை உருவாகும். தேனீக்கள் நம்முடன் இயற்கையாக வளர்ந்து வரும் உயிரினம் தேனீக்கள் என்றால் கொட்டும் என்பது பொதுவான கருத்து. தேனீக்களை கண்டு பயப்படத்தேவையில்லை சாதாரணமாக வீட்டில் வளர்க்கலாம்.

பயத்தைபோக்குவதற்காக மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறேன். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி நடத்தி வழிகாட்டுகிறேன். தேனீக்கள் விவசாயத்துடன் ஒன்றுபட்டது. தேனீக்களால் 60 சதவீத மகரந்தச் சேர்க்கை உருவாகி இயற்கையின் விவசாயமாக காய்கறிகள் பழங்கள் கிடைக்கிறது.

கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி கிடைக்கும் விவசாய உற்பத்தியால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வீடுகள் தோறும் தேனீக்கள் வளர்ப்பதற்கான கூண்டுகளை விற்பனை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளேன். தேனீக்கள் வளர்ப்பால் விவசாயம் செழிப்பாகும் என்பதாலும் ஆரோக்கியமான உணவுப்பொருள் என்பதாலும் இத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்றார். கல்லூரி மாணவர்கள் கூறுகையில் ‘இந்த பயிற்சியினால் தேனீக்கள் குறித்த அச்சம் நீக்கி உள்ளது’ என்றனர்.

Related Stories: