ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சியில் அனுமதியின்றி அரசு இடத்திலுள்ள மரங்களை வெட்டி விற்பவர்கள் மீது நடவடிக்கை

*குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு

ஆரணி :  ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சியில் அனுமதியின்றி அரசு இடத்திலுள்ள மரங்களை வெட்டி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.ஆரணி வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டம் ஆர்டிஓ தனலட்சுமி  தலைமையில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ தனலட்சுமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது, ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:   தச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து முழுமையாக விவாதிக்கவும் ஆர்டிஓ தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

மேலும், தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அகிலாண்டபுரம் கிராமத்தில் ஓதலவாடி செல்லும்  சாலை அருகில்  சுமார் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள முள்வேலி மற்றும் கலப்பு மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதிபெறாமல்  தனிநபர்கள் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி அனுமதியில்லாமல் மரங்களை வெட்டி விற்பனை செய்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இதேபோல்,  ஆரணி அடுத்த மாமண்டூர் அருகேயுள்ள திருவாழிநல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:   நான் மேற்கண்ட கிராமத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். மேலும்,  வீட்டின் உரிமைகள் குறித்து வருவாய் ஆய்வாளர், விஏஓ சான்றிதழ்களை மனுவுடன் இணைத்துள்ளேன். அதனால், ஆவணங்களை ஆய்வு செய்து எனது கணவர் பெயரில் வழங்கியுள்ள பட்டா எண் நீக்கி, எனது பெயருக்கு பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் சேர்த்தல், பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், பட்டா ரத்து, நில அளவீடு செய்தல், யூடிஆர் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா, பரப்பு திருத்தம்,  அனாதீனம் தடை, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாதி மற்றும் வாரிசு சான்றுகள், ஆதரவற்ற விதவை சான்று, மணல் கொள்ளை தடுத்தல், கல்வி கடன், புகார் மனு, கல்வி கட்டணம்  செலுத்த உதவி, பள்ளி கட்டிடம் மாற்றம், கிராம சபை நடைபெறாதது குறித்த புகார், மரம் அகற்றுதல், சாலை வசதி செய்துதர கோரி உள்ளிட்ட 73 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து, ஆர்டிஓ தனலட்சுமி பெற்று விசாரித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதில், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: