மதுவிலக்கு போலீசார் மிரட்டுகின்றனர்-திருநங்கையர் கலெக்டரிடம் புகார்

நாகர்கோவில் :  மதுவிலக்கு போலீசார் தங்களது காலனிக்கு வந்து மிரட்டுகின்றனர் என்று திருநங்கையர் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் அளித்தனர்.

வெள்ளமடம் அருகே உள்ள வீரமார்த்தாண்டன் புதூர் திருநங்கைகள் காலனியை சேர்ந்த திருநங்கையர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் வீரமார்த்தாண்டன் புதூர் காலனியில் திருநங்கைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் வசித்து வருகிறோம்.

நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க யாசகம் பெற்றும், சிறுகுறு சுய தொழில்கள் செய்தும் வாழ்ந்து வருகிறோம். கடந்த 28ம் தேதி அன்று மாலை எங்கள் திருநங்கையர் காலனிக்கு தங்களை மதுவிலக்கு பிரிவு காவலர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு 2 நபர்கள் வந்தார்கள். மேலும் அவர்கள் எங்களை மிரட்டும் வகையில் நீங்கள் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்கிறீர்களா? எங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று மிரட்டினர்.

 தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சமூகத்தில் எங்கள் பெயர் கெடுவதால் நாங்கள் மிக வருத்தம் அடைகிறோம். நாங்கள் வாழ்வாதாரத்திற்கு போராடி வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அத்தகைய சமூக சீர்கேடு பணி செய்ய எந்த அவசியமும் வந்தது இல்லை. ஆதலால் பொய் புகாரின் பேரில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படும் என்ற அச்சத்தில் தங்களிடம் இந்த மனுவை அளிக்கிறோம். தாங்கள் எங்கள் திருநங்கையர் சமூகம் சந்திக்கும் இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கண்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: