அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள்-தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புவனகிரி :  புவனகிரி பகுதியில் அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புவனகிரி நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நகரமாக புவனகிரி விளங்குகிறது. ஆனால் சமீப காலங்களாக புவனகிரி நகரப் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடரும் வாகன விபத்துகளால் பொதுமக்கள் நிம்மதி இழந்து அச்சமடைந்து உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கனரக வாகனங்கள் மோதி அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டாரஸ் மணல் லாரிகளால் புவனகிரி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதோடு விபத்துகளும் தொடர் கதையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

 தற்போது நாகை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிக்காகத்தான் ஏராளமான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. குறிப்பாக டாரஸ் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதனால் சாலைகள் சேதமடைவது ஒருபுறம் என்றாலும், கட்டுப்பாடு இல்லாமல் மின்னல் வேகத்தில் வாகனங்களை லாரி டிரைவர்கள் ஓட்டி செல்கிறார்கள். அதோடு பெரும்பாலான லாரி டிரைவர்கள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஒட்டிச் செல்கின்றனர்.

சில டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே கனரக லாரிகளை ஓட்டுவதால் விபத்துக்கள் தொடர்கதையாகி உள்ளது. கடந்த சில தினங்களில் டாரஸ் லாரிகளால் மட்டும் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது. அதில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  குறிப்பாக புவனகிரி நகர போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்துவதிலும், போக்குவரத்தை சீரமைப்பதிலும் எந்தவித அக்கறையும் செலுத்துவதில்லை.

வெளியூர்களிலிருந்து அதிக அளவு பாரத்துடன் மணல் ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள், புவனகிரி நகரை கடந்து செல்லும்போது போலீசார் வாகனங்களை சோதனையிட்டு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது இந்த பகுதி சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. அவ்வாறு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை ஒழுங்குபடுத்தும்போது விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

குறிப்பாக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்க செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே லாரி டிரைவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

 புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கனரக வாகனங்களால் ஒருபுறம் நிம்மதி இழந்து தவித்தாலும், மறுபுறம் லாரிகளால் ஏற்படும் விபத்துகளும் அவர்களை மனதளவில் பாதிக்க செய்து விடுகிறது.

எனவே இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த புவனகிரி காவல் நிலைய அதிகாரிகள், போக்குவரத்திற்கென தனியே ஒன்றிரண்டு காவலர்களை நியமித்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories: