ஆரல்வாய்மொழி - குமாரபுரம் சாலையில் 2019ல் ரயில்வே பாலம் இடிப்பு மூன்று ஆண்டுகளாக முடியாத மேம்பாலப்பணி

*போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி-குமாரபுரம் இணைப்பு சாலையில் ரயில்வே மேம்பாலம் 2019ல் இடிக்கப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் புதிய மேம்பாலம் பணி முடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக ஆரல்வாய்மொழி - குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற ரயில்வே பாதையில் மேம்பாலம் இருந்தது.

இந்நிலையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை தொடர்ந்து, இந்த பழைய மேம்பாலத்தினை இடித்து புதிய மேம்பாலம் அமைப்பதற்காக 2018-ம் ஆண்டு குமாரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் இந்த சாலையானது மிக முக்கியமான சாலை என்பதால் நவீன தொழில்நுட்ப முறையில் இடித்து 6 மாதங்களுக்குள் புதிய பாலப்பணியானது முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் 19-08-2019 அன்று பாலமானது இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.  ஆனால் அதன் பின்னர் கடந்த 1 ½ ஆண்டு காலமாக எந்த வித பணிகளும் நடைபெறாமல் பாலப்பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகளவில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்பகுதியில் தான் உள்ளது. இந்த நிறுவனங்களில் 2,000-க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  மேலும் பூந்தோட்ட விவசாய நிலங்கள் அதிகம் காணப்படுகின்ற பகுதியாகவும் இப்பகுதி உள்ளது.  இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

 இதைப்போன்று ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தனியார் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளும், கலை கல்லூரிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரி, பள்ளிகளுக்கு குமாரபுரம், சிதம்பரபுரம், யாக்கோபுரம், ஊரல்வாய்மொழி, வடக்கன்குளம் போன்ற கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.  இவர்கள் மேம்பால பணிகள் நடைபெற்ற பாதை வழியாக வருகின்ற 15 L யாக்கோபுரம், 15 D ஊரல்வாய்மொழி பேருந்துகளை மாணவ மாணவிகள், விவசாயிகள், காற்றாலை நிறுவன தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

 இந்நிலையில் இப்பால பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பல ஆண்டுகளாகியும் பாலப்பணிகள் முடிக்கப்படாமல், பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் இவ்வழியாக இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆரல்வாய்மொழிக்கு வராமல், 4 வழி சாலை வழியாக வந்து மங்கம்மாள் சாலை வழியாக தோவாளை வந்து நாகர்கோவிலுக்கு செல்கிறது.  மறுமார்க்கமாக இதே வழியாக சென்று வருகிறது.

இதனால் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆரல்வாய்மொழிக்கு செல்ல முடியாமல் நான்கு வழிச்சாலையில் இறக்கி விடப்படுகிறார்கள்.  இதனால் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

எனவே இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்கி, பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தெற்கு ரயில்வே நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

₹80  கோடி மதிப்பில் பாலம்

மணியாச்சியிலிருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்க ₹ 1,752 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இரட்டை ரயில் பாதை நிலம் கையகப்படுத்துதல், ரயில் பாதைகள் அமைத்தல், மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மணியாச்சியிலிருந்து நாகர்கோவில் வரை சுமார் 30 சிறு பாலங்களும், மூன்றடைப்பு மற்றும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயும், ஆரல்வாய்மொழி குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கேயும் பெரிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன.  இதில் ஆரல்வாய்மொழி நெடுஞ்சாலையிலிருந்து குமாரபுரம் இணைப்புச் சாலையில் சுபாஷ்நகர் பகுதியில் போடப்படுகின்ற மேம்பாலமானது சுமார் 295 மீட்டர் நீளமுடையது. இதில் ரயில்வே இருவழிப்பாதையில் போடப்படுகின்ற பாலத்தின் அளவு 70 மீட்டர் ஆகும். இப்பணிகளின் மதிப்பு (பழைய பாலத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடித்து புதிய பாலம் அமைக்க) சுமார் ₹80 கோடி ஆகும்.

Related Stories: