போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மீண்டும் ஒருவழிப் பாதை அமல்படுத்த வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம், தாலுகா தலைமையிடமாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி- திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் சாத்தான்குளம் அமைந்துள்ளதால் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை நாகர்கோவில் இருந்து ஏராளமானோர் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கு வந்து செல்கின்றனர்.

சாத்தான்குளம் வரும் பஸ்கள், வாகனங்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாசரேத் சாலையில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிஎஸ்ஐ சர்ச் வரை பிரதான பஜாராக விளங்குகிறது. இப்பகுதியில் சாதாரண நேரங்களில் வாகனங்கள் முறையாக சென்று திரும்புகின்றன. காலை, மாலை நேரங்களிலும் மற்றும் சுபமுகூர்த்த நாள், விழா காலங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. போலீசார் வந்த பிறகே போக்குவரத்து நெரிசல் சீராகிறது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.

அதன்படி நாகர்கோவில், முதலூர், பெரியதாழை, உடன்குடி, தட்டார்மடம், மணிநகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வழியாகவும், திருச்செந்தூர், திருநெல்வேலி, நாசரேத், பேய்க்குளம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் வழக்கம்போல் நேரடியாக பஸ் நிலையத்துக்கும், முதலூர், தட்டார்மடம், பெரியதாழை பகுதியில் வரும் வாகனங்கள் சிஎஸ்ஐ சர்சில் இருந்து புறவழிச்சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்கும் செல்ல வேண்டும் என ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டு 6 மாதம் அமலில் இருந்தது.

அதன் பிறகு ஒரு வழிப்பாதையை வாகன ஓட்டிகள் கடைபிடிக்காமல் சென்று வருவதால் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. பண்டிகை காலங்களில் மட்டும் ஒரு வழிப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட மீண்டும் ஒரு வழிப்பாதையை போலீசார் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி வேலை நாட்களில் சிஎஸ்ஐ சர்ச் முன்பு போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதையும் தடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘‘எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

மாவட்ட திமுக பிரதிநிதி சரவணன் கூறுகையில், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பிருந்து பஜார் ஆரம்பமாகி சிஎஸ்ஐ சர்ச் வரை உள்ளது. இப்பகுதியில் கடைகள் அதிகம் உள்ளதால் ெபாதுமக்கள் வாகனங்களிலும், பாதசாரியாகவும் வந்து செல்கின்றனர். மேலும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ேநர விரயமாவதுடன் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே போலீசார் ெபாதுமக்கள் நலன் கருதி மீண்டும் ஒருவழிப்பாதை அமல்படுத்தி, அதற்கான எச்சரிக்கை பலகையும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்வீட்ஸ் கடைக்காரர் கணேஷ்

குமார் கூறுகையில், ஒருவழிப்பாதை அமலில் இல்லாததால் அனைத்து வாகனங்களும் இஷ்டம்போல் செல்கிறது. இதனால் பஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சிறார்கள் பஜாரில் பைக்கில் அதிவேகமாக செல்வதால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது பஜார் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதை கேமரா மூலம் கண்காணித்து பெற்றோரை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் தொடர்ந்து செயல்பட்டால் பெற்றோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் ஒருவழிப்பாதையை முறையாக அமல்படுத்திட வேண்டும்.

Related Stories: