ஆந்திர முதலமைச்சர் பயணம் செய்த விமானத்தில் கோளாறு: விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்

விஜயவாடா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பயணம் செய்த விமானம் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனி விமானத்தில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் வட்ட மேசை கருத்தரங்கில் பங்கெடுப்பதற்காக விமானத்தில் புறப்பட்டார்.

இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தில் ஆந்திர மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஆந்திர முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய மார்ச் மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களை அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயவாடா மாவட்டம் கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பயணம் செய்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறுகளால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாடே பள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் புறப்பட்டு சென்றார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்ததை அடுத்து துரிதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; விமானத்தின் ஏசியில் உள்ள வால்வில் ஏற்ப்பட்ட கசிவு காரணமாக விமானத்துக்குள் காற்றின் அழுத்தம் அதிகமானதை தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.  

ஆந்திர முதலமைச்சர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஆந்திர முதல்வர் டெல்லி புறப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் விமானத்தில் ஏற்ப்பட்ட கோளாறு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Related Stories: