கடப்பேரி அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

தாம்பரம்: தாம்பரம் - திருநீர்மலை சாலையில் கடப்பேரி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த, பள்ளியை கடந்த 1998ம் ஆண்டு டி.ஆர்.பாலு எம்.பி துவக்கி வைத்தார். பின்னர் 2001-02ல் தென்சென்னை எம்பியாக டி.ஆர்.பாலு இருந்தபோது, அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் பள்ளி கட்டிடங்கள், இருக்கை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்து, கழிவறை வசதி இன்றி மாணவர்கள் அவதிப்பட்டனர்.

மேலும், இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளி கட்டிடங்களுக்கு நடுவே சாலை செல்வதால் மாணவர்களுக்கு அது இடையூறாக இருந்தது. இப்பள்ளியில் சரியான கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாததால் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்யாண் நகர், சேலையூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதி மாணவர்கள் எளிதில் பள்ளிக்கு சென்று படிக்க வசதியாக, அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டிடம் அமைத்து தர கோரியும், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், எம்பி டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை பராமரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடப்பேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான 98 சென்ட் நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. எனவே, பள்ளியின் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் கட்டமாக 50 லட்சம் நிதி ஒதுக்கினார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், கடப்பேரி ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளிக்கு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியை. உயர்நிலை பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் லிங்கேஸ்வரிபாபு, ஜோதிகுமார் ரமணிஆதிமூலம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: