மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியலுக்கு அனுமதி, மாநகராட்சியில் ஜி.ஐ.எஸ் பிரிவு உள்ளிட்ட 64 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் இந்தாண்டுக்கான முதல் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அனைத்து மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அதன்படி, கேள்வி நேரம் முடிந்த பின்னர், மாமன்ற கூட்டத்தின் வாயிலாக 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தவகையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் பின்வருமாறு: சென்னை, மாநகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றும் மூன்று நட்சத்திர குறியீடு பெறுவதற்கான இறுதி செய்தல், அதேபோல, கொசு ஒழிப்பு பணிக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களை ஒரு வருட காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்தல், இணைய வழி கட்டிட வரைப்படம் துல்லியமாக ஆய்வு செய்வதற்காக மென்பொருளை வாங்குவதற்கு நிர்வாக அனுமதி வேண்டுதல், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை சமன் செய்ய புல்டோசர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொள்ள நிர்வாக அனுமதி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல, சென்னை மாநகராட்சி அறிவிப்புகளை அறிவிக்க பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் 1,336 எண்ணிக்கையில் கொள்முதல் செய்தல், மண்டலம் 4 முதல் 8 வரையில் உள்ள குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் மிதிவண்டிகளுக்கு மாற்றாக சிங்கார சென்னை 2.0  திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மிக முக்கிய தீர்மானங்களாக சென்னை மாநகராட்சியில் புவிசார் தொழில் நுட்ப பிரிவை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல், அதேபோல, தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி ஏரியா சபை அமைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி மற்றும், அதற்கு வார்டு வாரியாக உதவிப்பொறியாளர்களை செயலாளராக நியமித்து சபைகளை நடத்துவதற்கான அனுமதியும் கோரப்பட்ட தீர்மானமும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: