முகத்துவார ஆற்றில் உயர் அழுத்த மின்கம்பம் 8 மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார ஆற்றில் உயர்கோபுர மின் கம்பங்கள் அமைத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பத்தை கண்டித்து, மீனவர்கள் படகுடன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், முகத்துவாரகுப்பம், காட்டுக்குப்பம், சிவன்படவீதி குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கொசஸ்தலை ஆறும், கடலும் இணையும் முகத்துவார பகுதியில் ஆற்றில் மீன், இறால், நண்டு பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆற்றில் வடசென்னை அனல் நிலையத்திலிருந்து சாம்பல்  விடப்படுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், 3வது அலகில் இருந்து மின் விநியோகிதத்திற்காக முகத்துவார ஆற்றின் நடுவே உயர் கோபுர மின்கம்பங்கள் அமைக்கப்பதற்காக, ஆற்றில் கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முகத்துவார ஆற்றில் சாம்பலை விடக்கூடாது, வடசென்னை அனல் மின் நிலையத்தில் சுற்றியுள்ள கிராம மீனவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், எண்ணூர் மீனவ மக்கள் நலசங்கம் தலைவர் ராஜீ, செயலாளர் குமரன், பொருளாளர் குமரவேல் ஆகியோர் தலைமையில், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் வடசென்னை அனல்மின் நிலைய மேம்பாலத்தின் கீழ், முகத்துவார பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: