இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு வன்முறையின் வலி மோடிக்கு புரியாது: ராகுல்காந்தி ஆவேச பேச்சு

ஸ்ரீநகர்: ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்த நிலையில் ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையின் வலி மோடிக்கு புரியாது என்று ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதை தொடர்ந்து நேற்று ஸ்ரீநகரில் பஞ்சாசவுக் பகுதியில் ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோரும், எதிர்கட்சி தரப்பில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி பங்கேற்றார்.

மேலும் ஜேஎம்எம், பிஎஸ்பி, தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, இந்திய கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ஸ்ரீநகரில் கொட்டும் பனியிலும் இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: நான் இந்த யாத்திரையை  எனக்காகவோ அல்லது காங்கிரசுக்காகவோ செய்யவில்லை. ஆனால் நாட்டு மக்களுக்காக  செய்தேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு  எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவையும்  பொருட்படுத்தாமல் பேரணி சென்றது.

ஆனால் ஆர்எஸ்எஸ்,பாஜ  வன்முறையைத்  தூண்டுவதன் மூலம் நாட்டின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிமுறைகளை  தகர்க்க  நினைக்கிறார்கள். முன்னாள் பிரதமர்கள் எனது பாட்டி இந்திரா காந்தி, எனது  தந்தை ராஜிவ் காந்தி  படுகொலை செய்யப்பட்ட போது தொலைபேசியில் எனக்கு தகவல்  தெரிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட வேதனை, வலி மறக்க முடியாதவை. வன்முறையைத்  தூண்டுபவர்களால் அந்த வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. மோடி ,  அமித் ஷா , பாஜ, ஆர்எஸ்எஸ் போன்ற வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு இந்த வலி  புரியாது. ராணுவ வீரரின் குடும்பத்தினர் புரிந்துகொள்வார்கள், புல்வாமாவில்  கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர் புரிந்துகொள்வார்கள்,  காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள். ஒருவருக்கு அந்த வலி வரும் போதுதான்  புரியும்.  

இந்த யாத்திரையின் நோக்கம் நமது அன்புக்குரியவர்களின்  மரணத்தை அறிவிக்கும் தொலைபேசி அழைப்புகளை இனிமேல் இல்லாமல் மாற்றுவது  ஆகும். அது ஒரு சிப்பாயாக இருந்தாலும், ஒரு சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும்  அல்லது எந்த காஷ்மீரியாக இருந்தாலும் சரி. ஜம்முவில் என்னைப்போல் பா.ஜ  தலைவர்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உயிருக்கு  பயந்து அதை செய்ய மாட்டார்கள். ஐம்மு யாத்திரையில் நான் தாக்கப்படலாம் என்ற  தகவல் அடிப்படையில் பயணத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டேன்.

நான் அதைப்  பற்றி யோசித்தேன். பின்னர் நான் எனது பூமியில், என் மக்களுடன்(ஜம்மு)  கைகோர்த்து நடப்பேன் என்று முடிவு செய்தேன். என் சட்டையின் நிறத்தை மாற்ற  அவர்களுக்கு (அவரது எதிரிகளுக்கு) ஏன் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அவர்கள்  வேண்டுமானால் அதை சிவப்பு நிறமாக்கட்டும் என்று முடிவு செய்தேன். ஆனால்  காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை வழங்கவில்லை. அவர்களின் அன்பு  நிறைந்த இதயத்தை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: