கன்னட பாடலை பாடாததால் பாலிவுட் பாடகர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கன்னட மொழி பாடலை பாடாததால், பிரபல பாலிவுட் பாடகர் கைலாஷ் கெரின் மீது பார்வையாளர்கள் பாட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் மூன்று நாள் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவர், பாடகர் கைலாஷ் கெரை நோக்கி பாட்டிலை வீசினார். அதையடுத்து நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அதிரடியாக செயல்பட்டு, கைலாஷ் கேர் மீது பாட்டிலை வீசிய நபரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஹம்பியில் நடந்த இசைக் கச்சேரியில், இந்தி பாடல்கள் மட்டுமல்லாது, கன்னட பாடலையும் பாடுமாறு பார்வையாளர்கள் சிலர் பாடகர் கைலாஷ் கெரை வற்புறுத்தினர். ஆனால் கைலாஷ் கெர் கன்னடப் பாடலை பாடாமல், இந்திப் பாடலை மட்டும் பாடியுள்ளார். இதனால் அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இதனால் சிறிது நேரம் இசை நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது’ என்றனர்.

Related Stories: