வெட்டியும், ஒட்டியும் சமூக ஊடகங்களில் வெளியீடு அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பளீர்

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பதிவு குறித்து எனக்கு தெரியாது. அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கட்சி கூட்டணிகளில் பல கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். அதனை வெட்டியும், ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். இதை நான் பொருட்படுத்தவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவார். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவார். குஜராத்தில் சிறுபான்மையினர் படுகொலை தொடர்பான ஆவணப்படம் பிபிசி வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே நாங்கள் ‘பிரதமர் மோடிதான் இதற்கு காரணம்’ என கூறி வருகிறோம். இப்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அதானி நிறுவனத்தில் ஊழல்கள் நடப்பது குறித்து ஏற்கனவே பல முறை  தெரிவித்துள்ளார். இதைத்தான் தற்போது அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து  அறிக்கையாக வெளியிட்டுள்ளது. எனது தாத்தா பெரியார், என் தந்தை சம்பத், என் மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் ஈரோட்டின் வளர்ச்சிக்காக பல பணிகள் ஆற்றி உள்ளனர். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை செய்வதற்காகத்தான் நான் போட்டியிட ஒப்புக்கொண்டேன். நான் எம்.பி.யாக, ஒன்றிய அமைச்சராக இருந்துவிட்டு மீண்டும் எம்எல்ஏவாக போட்டியிடுவதா?, என சிலர் கேட்கின்றனர். மக்கள் பணியாற்ற வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: