வேட்பு மனுக்களை 48 பேர் பெற்றனர்: இன்று மனுதாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர். வேட்பு மனு தாக்கல் இன்று (31ம் தேதி) துவங்க உள்ளதையொட்டி, வேட்பு மனுக்களை பெற்று செல்ல வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டனர். இதற்காக வேட்பு மனுக்கள் வழங்கும் இடத்தில் இருக்கைகள் போடப்பட்டு, முதலில் வந்தவர்கள் அடிப்படையில் வரிசையாக வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் 13 பேரும், நேற்று 35 பேரும் வேட்பு மனுக்களை பெற்று சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கிழக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான முத்துக்கிருஷ்ணன் கூறுகையில்,  ‘‘காங்கிரஸ், அதிமுக உட்பட பல கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என இதுவரை மொத்தம் 48 பேர் வேட்பு மனுக்களை பெற்று சென்றுள்ளனர்’’ என தெரிவித்தார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சார்பாக அவரது வழக்கறிஞர் வேட்பு மனுவை பெற்று சென்றார். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்காததால், பிரபாகரன் என்பவர் வேட்பு மனுவை பெற்று சென்றதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: