பிபிசி ஆவணப்பட வழக்கு வரும் 6ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வரும் 6ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பிபிசி ஊடகம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை 2 பகுதிகளாக வெளியிட்டது. இது கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து ஆவணப்படத்தை ஒன்றிய அரசு நீக்கி தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் சி.யு.சிங் ஆகியோர் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக ஆஜராகி, ‘‘பிபிசி ஆவணப்படம் தொடர்பான மனுக்களை அவசர வழக்குகளாக உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும். தடையை மீறி மக்கள் ஆவணப்படங்களை பார்ப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அஜ்மீரில் மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்’’ என்றனர். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, வரும் 6ம் தேதி இந்த வழக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

* நீதிமன்றத்தின் நேரம் இப்படிதான் வீணாகிறது

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டிவிட்டர் பதிவில், ‘ஆயிரக்கணக்கான சாமானியர்கள் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரத்தை இவர்கள் இப்படித்தான் வீணடிக்கிறார்கள்’ என கூறி உள்ளார்.

Related Stories: