மார்ச் 1 முதல் செய்முறைத் தேர்வு மே 5ம் தேதி பிளஸ்2, 17ல் 10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை:  பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட் மே 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 17ம் தேதியும் வெளியாகும். தேர்வுக்கு முன்னதாக மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ்1, பிளஸ் 2 படிக்கின்ற மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரையும் நடக்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் மொத்தம் 23 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுத் தேர்வுகளை குழப்பம் இல்லாமலும், பாதுகாப்பான முறையிலும் நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை எடுத்து வருகிறது. அதற்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி  ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றுகளையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சுமார் 25 லட்சம் பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வில் மேற்பார்வைப் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களை எப்படி நியமனம் செய்வது, கேள்வித்தாள் காப்பாளர்களை எப்படி நியமிப்பது, தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு தாமதம் இல்லாமல் வந்து செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பொதுத் தேர்வில் எந்த பிரச்னையும் இல்லாமல் அதிகாரிகள் தேர்வை நடத்தி முடித்துள்ளனர். அதேபோல, இந்த ஆண்டும் நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துக்கள். தற்போது, சில திருப்பத் தேர்வுகள் முடிந்துள்ளன. இன்னும் இரண்டு திருப்பத் தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. செய்முறைத் தேர்வுகளை பொறுத்தவரையில் மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால் செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். தனித் தேர்வர்களின் நலன் கருதி 30, 31ம் தேதிகளிலும் தக்கல் முறையின்கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பொதுத் தேர்வு நடக்கும் போது ஒவ்வொரு தேர்வு முடிய முடிய விடைத்தாள்களை திருத்தும் பணி உடனடியாக நடத்தப்படும். மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படும். மே 17ம் தேதி பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும். மே 19ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான ரிசல்ட் வெளியாகும்.

இதுபோன்ற ஆய்வுக் கூட்டம் தேர்வுக்காக மட்டும் அல்லாமல் அதிகாரிகள் இடையே புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடக்கும். பொதுத் தேர்வு தொடர்பான அச்சம் ஏற்படக் கூடாது என்பதற்காக திருப்பத் தேர்வுகளை வைக்கிறோம். இந்த ஆண்டு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று நம்புகிறோம். முன்பு இருந்தது போல மாதிரி வினாவிடை புத்தகம் அச்சிட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மகேஷ பொய்யாமொழி தெரிவித்தார்.

பொதுத் தேர்வு எழுத உள்ளோர் விவரம்

* பத்தாம் வகுப்பு

மொத்தம் பதிவு செய்துள்ள மாணவர்கள் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67. மாணவர்கள்: 4 லட்சத்து 74 ஆயிரத்து 543, மாணவியர்: 4 லட்சத்து 63 ஆயிரத்து 522. இரண்டாம் பாலினத்தவர் 2.

* பிளஸ் 2

மொத்தம் பதிவு செய்துள்ள மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 482., மாணவர்கள்: 4 லட்சத்து 10 ஆயிரத்து 308, மாணவியர்: 4 லட்சத்து 41 ஆயிரத்து 173., இரண்டாம் பாலினத்தவர் 1.

* பிளஸ் 1

மொத்தம் பதிவு செய்துள்ள மாணவர்கள்: 7 லட்சத்து 87 ஆயிரத்து 783., மாணவர்கள்: 3 லட்சத்து 67 ஆயிரத்து 535., மாணவியர்: 4 லட்சத்து 20 ஆயிரத்து 242.

* தமிழ்வழியில் தேர்வு எழுத உள்ளோர்

10ம் வகுப்பில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 409 பேர், பிளஸ் 2 வகுப்பில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 106 பேர், பிளஸ் 1 வகுப்பில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 90 பேர்.

* வைபை வசதியுடன் நூலக சேவை

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள பொது நூலகத்தில் வைபை வசதி மூலம் மின் நூலக சேவையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்பேரில், தமிழ்நாட்டில் அரசு பொது நூலகங்களுக்கு வரும் வாசகர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் பயன்பெறும் வகையில் 500 நூலகங்களில் ரூ.24 லட்சம் செலவில் இலவச வைபை வசதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன்படி, சென்னையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: