இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி மனு தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு; ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நோட்டீஸ்

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்யலாமா என்று மூன்று நாளில் பதிலளிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\”ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம்.

ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதனால் இதுதொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ஹெச்.ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜரான எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஒரு முறையீட்டை வைத்தனர். அதில்,\”தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களது தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேப்போன்று அதிமுக கட்சியில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்ட விதிகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதுகுறித்த உரிய உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.மேலும் இந்த கோரிக்கை கொண்ட புதிய இடையீட்டு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளாதால் அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதில்,‘‘தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ள  மனுவை நாங்கள் பரிசீலித்து விட்டோம். அதனால் இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் எதிர் தரப்பான ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியோர் மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும் இதில் பிறப்பிக்கப்படும் உத்தரவு என்பது ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்திற்கு மட்டுமே ஆகும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக வழக்கு விவகாரம் ஒரு சிக்கலானது என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய கால தாமதம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம்  கேட்டுக்கொண்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் வழங்கும் பதில் மனுவை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா அல்லது ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையால் அது நிராகரிக்கப்படுமா என்பது  திட்டவட்டமாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அதிமுக வழக்கு விவகாரம் ஒரு சிக்கலானது.

* பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்யக் கூடாது.

* இதில் பிறப்பிக்கப்படும் உத்தரவு என்பது இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

Related Stories: