புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது, மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்த பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

நேற்று (29.01.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (30.01.2023) காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை -திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது 31.01.2023 மாலை வரை மேற்கு- வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றுழத்த மண்டலம் காரணமாக தூத்துக்குடி, மற்றும் எண்ணூர் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டடிருக்கிறது.

Related Stories: