யு19 டி.20 தொடரில் சாம்பியன் பட்டம்: இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும்.! ஷபாலி வர்மா பேட்டி

போட்செப்ஸ்ட்ரூம்: 16 அணிகள் பங்கேற்ற முதலாவது மகளிர் ஜூனியர்(யு19) உலக கோப்பை டி.20 தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 14 ஓவரில் 3 விக்கெட் இழந்து 69 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதுடன், வெற்றியை கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி டி.20 போட்டியை பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே நேற்று வெற்றிக்கு பின் கேபடன் ஷபாலி வர்மா கூறியதாவது: அனைத்து வீராங்கனைகளும் ஒருவரையொருவர் ஆதரித்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத உணர்வு. வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்கள் தினமும் எங்களை ஆதரித்தனர். இந்த அழகான அணியை வழங்கிய பிசிசிஐக்கு நன்றி மற்றும் கோப்பை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்தாக தென்ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மகளிர் டி.20 உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும், என்றார்.

Related Stories: