தனது சிறப்பான நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் பெருமைப்படும் அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

பெரம்பூர்: ‘‘தனது சிறப்பான நடவடிக்கையின் மூலம் மக்கள் பெருமைப்படும் அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்’’ என்று தயாநிதி மாறன் எம்பி பெருமிதத்துடன் கூறினார். சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம், வார்டு 98ல் ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெரு, கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் உள்ள குறுகலான கீழ்மட்ட பாலத்தை இடித்துவிட்டு 6.20கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக  பாலம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இந்த பாலத்தின் மொத்த நீளம் 17.60 மீட்டர், அகலம் 11.50 மீட்டர்( இருபுறமும் நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர்). இந்த பணிகள் அனைத்தும் 24 மாதத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழாவில் பங்கேற்ற தயாநிதி மாறன் எம்பி கூறியதாவது; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், இந்த பகுதியின் நீண்டநாள் கோரிக்கையானது அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியால் நிறைவேறி உள்ளது. ஆஸ்பிரின் பாலம் குறுகிய பாலமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்று மக்கள்   வைத்த கோரிக்கையினை தேர்தல் வாக்குறுதியாககொடுத்து இருந்ததை  நிறைவேற்றும் வகையில் 10 ஆண்டுகள் கோரிக்கையை 2 வாரங்களில் செயல்படுத்தி உள்ளார். 2 ஆண்டுகளில் இந்த பணி அனைத்தும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் இதனை 18 மாதங்களுக்குள் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பழைய பாலத்தை இடித்துவிட்டு கட்ட வேண்டி இருப்பதால் சில காலத்திற்கு ஏற்படும் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். கடந்தாண்டு மக்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பின்னர் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு எங்கும் மழை நீர் தேங்கவில்லை. சென்னை மக்கள் பெருமைப்படும் அளவுக்கு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார். இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு காலை சிற்றுண்டியை அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்பி, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வெற்றி அழகன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: