தண்ணீர் தொட்டி இருந்தும் இரு பஸ்நிலையங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பயணிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் பயணிகள் நிற்க இடம்இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் வசதியில்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.பொள்ளாச்சி நகரில் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் ஏற வருகின்றனர். வாரத்தில் அனைத்து நாட்களும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இதில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி, உடுமலை, திருப்பூர், கிணத்துக்கடவு, நெகமம் வழித்தட பஸ்கள் நின்று செல்கிறது. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாவே இருக்கும். பஸ் வரும் வரை காத்திருக்கும் பயணிகள், இருக்கு இடம்இல்லாமல் சிரமப்படுவதுடன், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர்.சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு, இரு பஸ்நிலையங்களிலும் சிறிய அளவிலான தொட்டி அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளில் பராமரிப்பில்லாமல் கிடப்பில் போடப்பட்டன. நாளடைவில் பயணிகள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை உருவானது.

வெகுதூரத்தில் இருந்து வரும் பயணிகள் குடிக்க தண்ணீர் இல்லாததால், காசு கொடுத்து பாக்கட் தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் இரு பஸ் நிலையங்களிலும், மீண்டும் குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: