விருதுநகர் பகுதியிலுள்ள பூங்காவில் கூடுதல் மின்விளக்கு வசதி-சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

விருதுநகர் : விருதுநகரில் மூடிக்கிடக்கும் நகராட்சி பூங்காக்களை புனரமைப்பு செய்யவும், விஎன்பிஆர் பூங்காவில் மின்விளக்கு மற்றும் கூடுதல் வசதிகள் செய்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.விருதுநகர் நகராட்சி மற்றும் ரோசல்பட்டி, கூரைக்குண்டு, சிவஞானபுரம், பாவாலி ஆகிய 4 ஊராட்சி மக்களின் ஒரே பொழுது போக்கிடமாக கல்லூரிச்சாலையில் உள்ள வி.என்.பி.ஆர் பூங்கா திகழ்கிறது. பூங்காவிற்கான நிலத்தை தானமாக கொடுத்த குடும்பத்தினர் நிலத்தை பூங்காவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பிற உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது என எழுத்துப்பூர்வமாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

விஎன்பிஆர் பூங்காவில் 60 சதவீத பரப்பளவினை நகராட்சி நிர்வாகம் பிற உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறது. சுமார் 40 சதத்திற்கு குறைவான இடத்திலேயே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் ஏற்கனவே இருந்த மரங்களும், அதற்கிடையில் ஆயிரம் சதுர அடியில் தனியார் அமைப்பின் பராமரிப்பில் அடர்வனம் அமைக்கப்பட்டு பூங்காவிற்கான அடையாளங்களாக உள்ளது.

பூங்காவினை மேம்படுத்தி உருவாக்க கடந்த ஆட்சியில் ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது, ஒப்பந்தம் எடுத்த நபர் பேவர் பிளாக் நடைபாதை மட்டும் அமைத்து கொடுத்து விட்டு பூங்காவிற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் சுற்றுச்சுவர் கூட கட்டாமல் நிதியை அதிகாரிகள் துணையோடு சுருட்டி சென்றுவிட்டார்.

அதன்பின் நகராட்சியில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுற்றுச்சுவர் மற்றும் ஒரு நினைவு தூண் பூங்காவின் உள்பகுதியில் கட்டப்பட்டது.

பூங்கா காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப் படுகிறது. பூங்காவில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். மேலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான குழந்தைகளுடன் பெற்றோர் வந்து செல்கின்றனர்.

குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் குறைவாக உள்ள நிலையில், பல குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் சூழல் உள்ளது. மேலும் இரவு பொழுதில் மின்விளக்குகள் பற்றாக்குறையால் பல பகுதிகள் இருள் சூழந்து கிடக்கிறது. இருள் பரவி கிடக்கும் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.விஎன்பிஆர் பூங்காவில் காலியாக கிடக்கும் இடங்களை பூங்காவாக மாற்றி, கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும், தேவையான இடங்களில் கூடுதல் மின் விளக்குகள் மற்றும் எம்பி, எம்எல்ஏ நிதியில் ஹைமாஸ் விளக்கு நிறுவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நகரில் பல இடங்களில் மூடிக்கிடக்கும் பூங்காக்களை மக்களின் பொழுது போக்கு மையங்களாக மாற்ற மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: